Thursday, August 28, 2014

மலரும் நினைவுகள் : 25 வருடங்களுக்கு முன் One-Touch

முதன் முதலாக எங்கள் வீட்டிற்கு ஒரு 2-in-1 வந்திருந்தது. National Panasonic. பழைய படங்களில் இன்னும் காணலாம்.அனைவரும் தூர நின்று பார்க்கலாம். யாரும் வீட்டில் இல்லாத போது தொட்டுக் கொள்ளலாம். 

சத்தம் போடாமல் Play Stop Rewind Forward பொத்தான்களை அமுக்கி கொள்ளலாம். Record பட்டனை  தொட மட்டும் யாருக்கும் உரிமை இல்லை. வானோலி கேட்டுக் கொள்ளலாம். 

இப்படியான ஒரு வஸ்து எங்கள் வாழ்கையை மாற்றிவிட்டது. பள்ளிவிட்டு வந்ததும் அதனுடன் ஒரு romance.  ஒரு முறை அக்காவை பாட சொல்லிவிட்டு பதிவு செய்தார் எங்கள் சித்தப்பா. யாரும் சத்தம்போடக்கூடாது, யாரும்  இங்கே அங்கே போகக்கூடாது கதவை மூட திறக்க கூடாது போன்ற பல கட்டுபாடுகள். அனைவரும் அமைதியாக உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க பாடல் பதிவானது. வானோலியில் அக்காவின் பாடல் கேட்டது போல ஒரு பெரிய மகிழ்ச்சி.

அது தான் சத்தம் போடக்கூடாதே என்று பல நாட்கள் வானோலியில் வரும் பாடல்கள் பதிவாகும் போதும் வீட்டில் மூச்சு. இவ்வாறு இருக்க சித்தப்பாவே தன் கட்டுபாடுகளை மீறி வானோலியில் வரும் பாடல்கள் பதிவு செய்யும் போது பேசினால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. அப்புறம் என்ன முயன்று பார்த்துவிடலாமே என்று ஹோஹோ என்று கத்தி தொண்டை தண்ணி தீர்த்துவிட்டு பதிவானதை மீண்டும் கேட்டால் ஹோஹோ எல்லாம் waste தான்.

அப்புறம் எடக்கு முடக்கா செய்துவிட்டு அக்கா பாடல் ஒலிநாடாவில் எல்லாம் காலி. வீட்டில் ஒரே திட்டு. Coney எனும் ஒலிநாடா. அழகாக இருக்கும். ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு தான். பிறகு தான் 90 நிமிட 60 நிமிட Sony ஒலிநாடாக்கள். அதுவும் துபாயிலிருந்து அப்பாவின் நண்பர்கள் யாராவது வாங்கி வந்தால் தான். தி்ட்டி தீர்த்த பிறகு வீட்டிற்கு வந்த மாமா அட ஏன் பசங்களை திட்டறீங்க இங்கே பாருங்க பின்னாடி ஒரு சின்ன Plastic இருக்கும். இதை உடைச்சிட்டீங்கன்னா பாடல் பதிவு செய்தது அழியாது. Record button அமுக்கினாலும் 
அமுக்க முடியாது. Read Onlyக்கு முதல் பாடம். ஆஹா. இது அற்புதமான விஷயமாச்சே என்று One-touch 
பாடத்தில் சேர்த்துக் கொண்டோம்.

இருப்பதோ சொற்ப cassettes. இதை வைத்துக் கொண்டு 10 நிமிட பாடலக்காக பின்னால் இருக்கும் தடுப்பை 
உடைப்பதா என்றே வருத்தப்பட்ட ஒரு மத்தியான நேரத்தில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு காபியுடன் வீட்டிற்கு வந்த இன்னொரு மாமாவிடம் புலம்பியதில் அட இதுக்கு போய் ஏன் கவலைபடறீங்க, ஒரு சின்ன காகிதம் கொண்டு வாங்க என்று சொன்னார். இன்னொரு பிரம்மாண்டமான விஷயம் நடக்கப்போகிறது என்று சரித்திர சிந்தனையுடன் நான் ஒரு காகிதம் கொண்டு வந்து கொடுக்க அவர் அதை சிறியதாக மடித்து பின்னால் இருந்த துளையை அடைத்துவிட்டார். 

ஆஹா நான் என்ன மாங்காய் மடையனா ஒரு electronic சமாச்சாரத்தில் இவர் காகிதம் வைத்தால் அது புரிந்துக் கொள்ளுமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் அந்த நாடாவை போட்டு Record ஐ தட்டினால் எகிறிக் கொண்டிருந்த பொத்தான் இப்போது உலக சமாதான உடன்படிக்கை செய்துக் கொண்டது போல் அமைதியாக உள்ளே சென்று பதிவு செய்ய துவக்க ஒரு ஆச்சர்யம் தான் எங்களுக்கு.

இவ்வாறா வீட்டில் வரும் பல குழந்தைகளின் நண்பனாகவும் பாட்டு நாடகம் வில்லுப்பாட்டு என்று நான் பள்ளியில் அடிக்கும் கூத்துகளுக்கு ஒரு சரித்திர ஏடாகவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக National Panasonic One-Touch Tape Recorder 2-in-1 எங்கள் வாழ்கையில் முக்கிய அங்கமாக ஆகிவிட்டது. 

மிகவும் காதல் மிகுதியுடன் நான் ஒரு நாள் அதை கொஞ்சிக் கொண்டிருக்க ஏதோ கோளாறு ஆனது. நாம் தான் எதிர்கால விஞ்ஞானியாயிற்றே என்று அதை நோண்டிக் கொண்டிருக்கும் போது 120-240 என்று ஒரு பொத்தான் பின்புறத்தில் காண அட இதே இந்த பக்கம் தள்ளித்தான் பார்ப்போமே என்று செய்ய டப்பென்று சத்ததுடன் உயிர் விட்டது எனதருமை ஒன்டச்.

அப்பாவின் நண்பர் வந்து அதை எடுத்துச் சென்று சரி செய்யது தர 50 ரூபாய் செலவிற்கு பிறகு கற்றுக் கொண்ட மின்சார பாடம் 120-240க்கும் இருந்த வித்தியாசம்.

வானோலியில் கூத்தபிரான் நடத்தும் சிறுவர் சங்கமாகட்டும் இரவில் வரும் ஒரு மணி நேரம் நாடகமாகட்டும் ஒரு பட பாடல்களாகட்டும் கோவாப்டெக்ஸ் கடையிலே சின்னக்குட்டி நாத்தனார் சில்லறையை மாத்தினார் கோவாப்டெக்ஸ் கடையில் ஒரு டவலு வாங்கினார் எனும் பசுமையான விளம்பரங்களாகட்டும் சென்னைக்கும் திருச்சிக்கும் சும்மா திருகி திருகி குதித்ததாகட்டும் அவ்வபோது கிடைக்கும் இலங்கை வானோலி நிலையத்திற்காக Antenna வை நேராக பெரிதாக்கி நிறுத்தியதாகட்டும் அருமையான காலங்கள்.

என்னதான் மடிக்கணினியில் பதிவு செய்யும் வசதி வந்தாலும் எம்பி3 பாடல்கள் கேட்டாலும் cassette போட்டு  பதிவு செய்து அதில் சிறியதாக பெயர் எழுதி வைத்து Head Cleaning Cassette போட்டு வாரம் ஒரு நாள்  அதை சுத்தம் செய்து மேலே ஒரு அழகிய embroider செய்த மஞ்சள் துணி போட்டு வைத்து வீட்டில் வருபவர்கள் எம் சாகசங்களை போட்டுக் காட்டி மகிழும் உணர்வுகள் என்றும் நினைவிலிருந்து நீங்காதவை. One-touch you touched our lives என்று சொல்லத் தோன்றுகிறது.

* * *