தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 11

11
கதிரை தேடிச் சென்று பல இடங்களில் தேடிய பிறகு அவனை ஊருக்கு அழைத்து வந்தனர் மோகனும் ரதீஸனும்.

தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம், காவல் துறை செய்ய வேண்டிய வேலை என்று இருவரும் நினைத்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு உந்துதலில் காரியத்தில் இறங்கி விட்டனர். மோகனுக்கு அலுவலத்தில் விடுப்பு சொல்லி விட்டு இறங்கியிருந்தான்.

இருவரும் களைப்பாறிய பின் மாலையில் சந்தித்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

டாக்டர் கதிரவனுக்கு எப்படி இருக்கு.

இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு மோகன். சீக்கிரம் நம்ம நாவலை அவரை படிக்க வைக்கனும்.

உங்க திட்டம் என்ன டாக்டர்?

நீங்க எழுதின என்னோட கதையை படிக்க வைக்கப் போறேன். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போது அவருக்குள்ள ஏற்படற மாற்றங்களை ஊர்ந்து கவனிக்கப் போறேன். அவரு என்னை மாதிரி மனோதத்துவ மருத்துவரா மாறனும். அதுக்கப்புறம் நிஜமான என்னோட நோயாளிகளை அவருக்கு அனுப்பப் போறேன். அதுக்கப்புறம் நீங்க புது நோயாளியா அவர் கிட்டே வரீங்க.

என்ன நான் நோயாளியாகவா எதுக்கு டாக்டர்?

சொல்றேன். இப்ப அவரு தன்னை ஒரு பெரிய மருத்துவரா நினைச்சிகிட்டு இருப்பாரு இல்லையா?

ஆமாம்.

அப்ப நீங்க நோயாளியா வந்து அவருக்கு என்ன வியாதி இருக்கோ அதே வியாதி உங்களுக்கு இருக்கறதா சொல்லப் போறீங்க.

அப்படியா? என்று வியப்பாக கேட்டான் மோகன். நம் மாதிரி எழுத்தாளர்களை விட இவரு மாதிரி மருத்தவர்களிடம் பல கதைகள் இருக்கும் போலே என்று நினைத்துக் கொண்டான்.

ஆமாம். இப்ப கதிருக்கு வந்திருக்கிற வியாதிக்கு அவரிடமே தான் வைத்தியமும் இருக்கு. அவர் உங்களுக்கு கொடுக்கபோற ட்ரீட்மென்ட் தான் அவருக்கு நான் கொடுக்கப் போற மருந்தும் குணம் செய்யற வழியும்.

பலே டாக்டர். நோயாளிகிட்டேயே மருந்தும் கண்டுபிடிச்சி அவருக்கே கொடுக்கப் போறீங்களா. பலே என்றான் மோகன்.

அது மட்டுமில்ல மோகன். உங்களுடைய வியாதிக்கு குணமாகிற வழி சொல்லும் போதே அவருக்கு குணமாயிடலாம். ஏன்னா இப்ப நமக்கு தேவை அவருடைய செல்ஃப் ரியலைசேஷன் தான். அவரே உணர்ந்தா தான் அவருடைய மாய வலையிலேர்ந்து வெளியே வரமுடியும் என்றார் சற்றே களைப்புடன்.

கேட்க நல்லா இருக்கு டாக்டர். இது மாதிரி நடந்துட்டா அற்புதமாக இருக்கும். அப்புறம் உங்க கிட்ட வந்து நான் இதை கதையா எழுதறக்கு அனுமதி கேட்பேன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றபோது அவருடையை மனைவி உங்கள பார்க்க போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று படபடப்புடன் சொன்னாள்.
மறுபடியும் போலீஸா, கதிர் இங்கே இருக்கும்போது வேறு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்தவாறே எழுந்தார். மோகனும் பின் தொடர்ந்தான்.

சென்ற முறை வக்கீலாக நினைத்து நடந்த கூத்தில் மாட்டிக் கொண்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் இன்னொருவருடன் வந்திருந்தார்.
வணக்கம் சார். வாங்க. என்ன வேணும் என்றார் ரத்தீஸன்.

வணக்கம் சார். கதிரவன் விஷயமா கொஞ்சம் பேசனும் என்றார் காவல் அதிகாரி சற்றே தயக்கத்துடன்.

மோகன் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக நான் கிளம்பறேன் டாக்டர். அப்புறமாக பார்க்கலாம் என்றவாறே நடக்க முயன்றான்.

காவல் அதிகாரியுடன் வந்திருந்தவர் நீங்களும் இருங்க மோகன் உங்க இரண்டு பேர்கிட்டேயும் தான் பேசனும் என்றார் பீடிகையுடன்.

ரத்தீஸனும் மோகனும் குழப்பத்தில் சொல்லுங்க என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தனர்.


பிறகு அவர்கள் பேசிய விஷயம் இவர்கள் இருவரையும் வேர்க்க செய்திருந்தது. 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி