தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 2

2

வீட்டுக்குள் நுழைந்ததும் கவனித்தேன். கயல் அமர்ந்திருந்தாள். கயல்விழி. என்னுடைய காதலி. முன்னாள் காதலி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எனக்கு இப்படியானதும் கழன்றுக் கொண்டது முதலில் இவள் தான்.

எங்கே தனியா போயிட்டு வரீங்க.

எங்கே போனால் உனக்கென்ன.

என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உங்க கூட வந்திருப்பேனே.

உங்க வீட்ல தான் பைத்தியத்தோட என்ன சகவாசம் சொல்லிட்டாங்களே.
கதிர், நீங்க பைத்தியம் இல்லை. எனக்குத் தெரியும்.

இப்பத்தான் தெரியுமா.

எப்பவுமே தெரியும். ஆனா நீங்க நடந்துகிட்ட வித்ததாலே நான் எத்தனை பிரச்சனைகளை சந்திச்சேன் தெரியுமா.

அம்மா எனக்கு இவகிட்ட பேச இஷ்டம் இல்லை. அவளை போகச் சொல்லுங்க என்று காட்டமாக கூறிவிட்டு என் அறைக்குள் நுழைந்தேன்.

அறைக்குள் ஒரு காலத்தில் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். இப்போதைக்கு சுண்டல் மடித்து வரும் தினசரி செய்தித்தாள் கூட வராமல் என் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொள்கிறார்கள்.
வெறுமையாக இருந்தது. மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. மூளைக்கும் உடலக்கும் இருந்த இணைப்பு துண்டித்துவிட்டது போல உணர்ந்தேன்.

என்னுடைய படுக்கையின் ஓரத்தில் சென்று அமர்ந்தேன். தலைகாணியை வயிற்றின் மேல் வைத்து இறுக்கிக் கொண்டேன்.

அம்மா நீங்களே சொல்லுங்கள்....கயல் அம்மாவிடம் முன்னறையில் பேசிக் கொண்டிருந்தாள்.

போன தடவை போலீஸ் வரைக்கும் பிரச்சனை போற வரையிலும் நான் இவருக்கு வந்த எல்லா பிரச்சனையிலும் தோள் கொடுக்கலையா. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் விவகாரம் போனதால என் வீட்டுல எத்தனை சண்டையின்னு உங்களுக்கே தெரியும். எங்க அண்ணாவும் அப்பாவும் இந்த பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லி வைச்சிருக்காங்க. அதையும் மீறி நான் இவரை பார்க்க வரேன்னா அதுக்கு என்ன அர்த்தம். அவருக்கு ஏன் புரியலை என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.

என் தாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

என் தந்தை வீட்டில் இல்லை. ஏதாவது ஜோசியக்காரனுக்கு 100 ரூபாய் தண்டம் அழுது என் பையனோட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க போயிருப்பார். இல்லை ஏதாவது மலையாள மாந்தரீகர் என் உடம்பில் மோகினி பிசாசு ஒன்று இருப்பதாக சொல்லி அவரிடமிருந்து பணத்தை விரட்டிக் கொண்டிருப்பார்.

முகத்தை துடைத்துக் கொண்டு கயல் என் அறைக்கு வந்தாள். நான் அமைதியாக இருந்தேன். யோசிக்கும் திறன் மாத்திரையால் தளர்ந்து போயிருந்த்து.

எங்க போயிருந்தீங்க கதிர்.

டாக்டர் ரதீசன். சைக்கியாட்ரிஸ்ட்.

என்ன சொன்னாரு.

ஒன்னும் சொல்லலை.

அப்புறம்...

நாளைக்கு வர சொல்லியிருக்காரு.

போலீஸ் பிரச்சனையை பத்தி சொன்னீங்களா.

இல்லை. என்னுடைய பிராப்ளம் மட்டும் தான் பேசினோம்.

சமீபத்தில ஏதாவது புக் படிச்சீங்களா.

இல்லை.

கட்டாயமா.

கட்டாயமா தான். இல்லாட்டா நானா எப்படி தனியா அவரை பாக்க போயிருக்க முடியும்.

என்னை கூப்பிட கூடாதா.

கயல், எனக்கு உடம்பு சரியாற வரைக்கும் நீ இங்க வந்து போறது சரியில்லை. உனக்கும் பிரச்சனை. எனக்கும் பிரச்சனை. எனக்கு சரியாகுதோ இல்லையோ உங்க வீட்ல ஒரு தடவை என்னை பைத்தியமா பாத்துட்டாங்க. அதை அவங்க மாத்திக் முடியாது. நானும் அவங்க சொன்ன வார்த்தைகளை மறக்கமாட்டேன். இந்த சம்பந்தம் நடக்காது. நீ நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.

அதை நான் பாத்துக்கறேன். நீங்க என்னை பத்தியோ என் கல்யாணத்தை பத்தியோ என் வீட்ல இருக்கறவங்களை பத்தியோ கவலைப்படாதீங்க. இப்ப ஒரு வாரமா புக் படிக்காம இருக்கீங்களா.

ஆமா.

புக் படிக்கறது விட்டுட்டா இத்தனை பிரச்சனை போயிடும் இல்லையா.
கயல், புக் படிச்சாலும் பிரச்சனை வராம இருக்கனும். அப்பத்தான் குணமானதா அர்த்தும். டிவி பார்த்து பிரச்சனை வந்தா?

சரி. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் நாளைக்கு உங்களோட வரேன்.

வேண்டாம், வர வேண்டாம்.

நான் வரேன் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு என் தலையை கோதிவிட்டு என் தாயிடம் விடைபெற்று வெளியேறினாள்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி