தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 9

9

எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள குறையால். அடுத்து என்னை சுற்றி இருப்பவர்களின் கண்டிப்புகளால். இப்போது இந்த மருத்துவரின் பரிசோதனைகள். என்னையும் என்னுடைய சமுதாயத்தில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த மரியாதையையும் வைத்து.

எனக்கு ரதீஸனின் மேல் மிகவும் கோபமாக வந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். என்னை தேட வேண்டாம். மனம் அமைதியானதும் திரும்பி வருகிறேன். தற்கொலை செய்துக் கொள்ள மாட்டேன். கவலை வேண்டாம் என்று எழுதிவிட்டு கொஞ்சம் பணமும் சில துணி மணிகளும் எடுத்துக் கொண்டு அன்றே இரவோடு இரவாக புறப்பட்டேன்.

கயலை நினைத்து வருத்தமாக இருந்தது. அம்மா அழுது புலம்புவாள். ஆனால் எனக்கு வேறு வழி தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவு எடுக்கும் சக்தியை இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

டில்லிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு ரயிலில் வந்து அமர்ந்தேன். சுற்றும் முற்றம் அனைவரும் என்னை பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. நேராக கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டேன். சாதாரணமாக தான் இருந்தது. யாரும் என்னை பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டேன். எனக்கு உள்ளே இருக்கும் பிரச்சனை வெளியே தெரிய வாய்ப்பில்லை என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எனக்கு எதிரே ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பழுத்துப் போன தாடி, 70 வயது மேலிருக்கும் போல் இருந்தது. காவி உடைகள் ஏதோ ஒரு சாமியார் என்பதை உறுதிபடுத்தியது. ஒரு ஜோல்னா பையில் ஏதோ வைத்திருந்தார். கையில் ஒரு ஆங்கில புத்தகம். கண்ணாடி இல்லை.

ரயில் பயணம் துவங்கி இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை பார்க்கிறார் என்பதை அறிந்ததும் நான் அவருடைய பார்வைகளை தவிர்த்தேன்.

ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் பார்க்கிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். என் மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அவரை உற்றுப் பார்த்தேன்.

தம்பி உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்று பேச்சை துவக்கினார்.

என்னையா கேட்கறீங்க பெரியவரே என்றேன் தெரியாதது போல.

ஆமாம் பா. உன்னைத்தான்.

ஒன்னும் பிரச்சனையில்லையே.

ஓ அப்படியா. எங்கே போயிகிட்டு இருக்கே.

இந்த டிரயினும் டெல்லி தானே போகுது. எல்லாரை மாதிரியும் நானும் டெல்லி தான் போறேன் என்றேன் காட்டமாக.

ஹா ஹா. இந்த டிரெயின் டெல்லி தான் போகுது. ஆனால் எல்லோரும் டெல்லி போகலை. வழியில பல தடவை நிக்கும். அங்கெல்லாம் மக்கள் இறங்குவாங்க தெரியுமா என்றார் அவரும் விடாமல்.

இலக்கில்லா பயணம் என்பது அவர் சொன்னதும் உறைத்தது.

டெல்லி தான் போறேன் என்றேன்.

அப்படியா டெல்லில எங்கே என்றார்.

அட இவர் விடமாட்டார் போலிருக்கிறதே.

டெல்லில எங்கே போனா என்ன உங்களுக்கு பெரியவரே என்றேன் மிகவும் காட்டமாக.

அட ஏம்பா கோவிக்கறே. 30 மணி நேர பயணம். பேசிக்கிட்டே போலாம் தான் என்றார் சற்றே என்னை அமைதிப்படுத்தும் முயற்சியுடன்.
தெரியலை என்றேன். எனக்கும் யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது.

எங்கிருந்து வரே

மெட்ராஸ்.

என்ன வேலை பாக்கறே

வேலையில்லை

அப்ப வேலை தேடி போறியா

ஆமாம்

அங்கே உனக்கு யாரையாவது தெரியுமா

தெரியாது.

எனக்கு அங்கே நிறைய பேரை தெரியும். வேலை வாங்கித் தரட்டுமா.

அவருடைய ஆர்வத்தை ஏன் கெடுப்பானேன் என்று நினைத்துக் கொண்டே, ஓ தாராளமா. அட்ரஸ் போன் தாங்க நான் போய் பாக்கறேன்.

ஓ. அவசியம் தரேன். அங்கே போய் எங்கே தங்கப்போறே.
தெரியலை.

ம்ம். சரி. எனக்கு தெரிஞ்ச ஆசிரம்ம் ஒன்னு இருக்கு. நான் அங்கே தான் போறேன். என்னோட வரியா.

ம் என்றே என்ன செய்வது என்று தெரியாமல்.

வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா

அடப்பாவி. என் முகத்துல எல்லாம் எழுதி ஒட்டியிருக்கும் போல என்று முகத்தை துடைத்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா

இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

அப்ப அம்மா அப்பாவோட சண்டையா.

பெரியவரே நீங்க ரொம்ப குடைஞ்சி குடைஞ்சி கேள்வி கேட்கறீங்க. என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. ஏதோ பேச்சுத் துணைக்குன்னு சொல்லிட்டு ரொம்ப ப்ர்ஸனலா பேசறீங்க என்றேன் கடுகு வெடிப்பது போல்.

கோச்சிக்காதேப்பா என்றார் மீண்டும். நடு நடுவில் அவர் எழுந்து செல்வதும் பல நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமருவதுமாக இருந்தார். அதுவும் எனக்கு எரிச்சலாக இருந்தது.

அவருடைய கண்களில் ஒரு ஒளி இருந்தது. அவருடைய குரலில் என்னை தாலாட்டும் அன்னையின் அரவணைப்பு இருந்தது. அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஆனால் அவர் கேட்கும் கேள்விகள் தான் எனக்கு கோபத்தை தந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்விகளில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி நானே கேள்விகளை கேட்க ஆரம்பிப்பது தான். அப்பாடா என் புத்தி இன்னும் மழுங்கவில்லை என்று என்னுடைய சாமார்த்தியத்தை பாராட்டிக் கொண்டே அவரை துளைக்க ஆரம்பித்தேன் என் கேள்விகள் மூலம்.

உங்க பேரு என்ன பெரியவரே.

ஹாத்தீம்

என்ன ஹாத்தீமா. முஸ்லீம் பெயரா இருக்கே.

ஆமாம். அதுல என்ன இப்போ.

இல்லை. பார்த்தா...

பார்த்தா ஹிந்து சாமியார் மாதிரி இருக்கா

ஆமாம். மதம் மாறிட்டீங்களா

இன்னொரு மதத்தை பின்பற்றனும்னா அந்த மதத்துக்கு மாறனும்னு
அவசியமா. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று போட்டியில் அவரே இன்னும் வென்றுக் கொண்டிருந்தார்.

இல்லை. ஆனா...

ஆனா என்ன.

ஹிந்து முஸ்லீமாகி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முஸ்லீம் ...

தம்பி நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி எடுத்துக் கனும். இது ஒரு
தேடல். அந்த தேடல் இன்னும் முடிவாகலை

என்ன தேடறீங்க

அது தெரியலை

என்ன தொலைச்சீங்க

அதுவும் தெரியலை

என்ன தொலைச்சீங்கன்னும் தெரியலை என்ன தேடறீங்கன்னும் தெரியலை உங்களுக்கு.

உனக்கு தெரியுமா. எங்கே போறேன்னும் தெரியலை எதுக்கு போறேன்னும் தெரியலை என்றார் என்னை மடக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டே.

சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம்.

நீங்க புரியாத புதிரா இருக்கீங்க. இல்லாட்டி என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க என்றேன் ஹாத்தீம் காவி உடையை அணிந்துக் கொண்டு என் முன்னால் அமர்ந்திருக்கும் குழப்பம் தீராமல்.

இப்பதானே பார்த்தே. அதுக்குள்ளே என்னை எப்படி புரிஞ்சிக்க முடியும். அதை விடு. எனக்கு வாழ்கை முடிவுல இருக்கு. இப்பவோ அப்பவோ. நீ வாழ வேண்டிய வயசு. உனக்கு என்ன பிரச்சனையின்னு சொல்லு. என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கறேன். எனக்கும் கொஞ்சம் வாழ்கையில் அனுபவம் இருக்கு.

டாக்டர் ரதீஸனிடம் சொன்னது போல் முதலில் இருந்து ஆரம்பித்து வக்கீலான கதை வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். யமுனாவின் மீது வண்டி சென்றுக் கொண்டிருந்தது.

அவர் தன்னுடைய பொருட்களை ஒரு பாலீத்தீன் கவரில் கட்டினார். எனக்கும் ஒரு பாலீத்தீன் உறையை கொடுத்து என்னுடைய பொருட்களையும் கட்டச் சொன்னார். பிறகு என்னுடன் வா என்று என்னை அழைத்தார், என்னவென்று கேட்கத் தோன்றாமல் அவர் பின்னால் நடந்து வண்டிப் பெட்டியின் கதவின் அருகில் வரைச் சென்றோம்.

வண்டி பாலத்தின் மீது சற்றே மெதுவாகச் சென்றது. என்ன நடக்கிறது என்பதை நான் உணருவதற்குள் என்னை ஆற்றில் சட்டென்று தள்ளிவிட்டு அவரும் பின்னாலேயே குதித்தார். கத்துவதற்கு கூட தெரியாமல் நீரின் ஆழத்தில் கலந்தேன்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி