தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 4

4



கயல்விழியை ஏன் தான் மருத்துவருக்கு அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது. என்னை பார்த்து புன்னகைத்த அவர், நீங்க கொஞ்ச வெளியே வெயிட் பண்ணுங்க என்று என்னை அனுப்பிவிட்டு அவளிடம் பேசத்துவங்கினார்.

Albert Camusன் தமிழ் மொழி பெயர்ப்பு நாவலான அந்நியனில் வருவது போல என்னை கண்ணாடி அறையில் அடைத்துவிட்டிருந்தார். அவர்கள் செய்கைகள் எனக்கு புரியாவிட்டாலும் என்ன பேசுகிறாள் கயல் என்பது எனக்கு புரியாமல் இல்லை.

தேர்வுக்கு சென்ற மாணவன் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுவது போல காவல் துறைக்கு நான் சென்ற கதையை தான் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள் போலும்.

எனக்கு எரிச்சலாக இருந்தது. என்னுடைய பிரச்சனையைப் பற்றி என்னை வைத்து பேசுவதை விட்டு அவளிடம் தனியாக என்ன பேச்சு. 

-----

கதிரவனுக்கு வந்திருக்கும் பிரச்சனையை சீரியல் பார்த்து கதை சொல்லும் ஒரு சராசரியான பெண்ணைப் போல கண்களை அகலப்படுத்திக் கொண்டு நடுவில் விசும்பல்களுடன் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கயல்.

சார் நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. ஏதோ ஒரு புக் படிச்சவரு அதில் கதாநாயகி கல்யாணத்துக்கு போகறதுக்காக தயார் ஆகிகிட்டு இருந்ததை விபரமா எழுதி தொலைச்சிருக்காரு. அதை படிச்சிட்டு இவரு புடவை கட்டிக்கிட்டு மேக்கப்பெல்லாம் போட்டுக்க ஆரம்பிச்சிருக்காரு. இவங்க வீட்ல இளவயசு பொண்ணுங்க யாரும் இல்லை. அதனால வீட்ல எந்த மேக்கப் பொருளும் இல்லை. கடைக்கு போய் இதையெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காரு.

இப்படித்தான் இன்னொரு புக்கை படிச்சிட்டு அதுல யாரோ கிரின்னு ஒரு பாத்திரம். மூணு தடவை ஐஏஎஸ்ஸில் பெயில் ஆனதால ரயில் தண்டவாளத்தில போய் படுத்துகிட்டானாம். அதனால இவரும் போய் அப்படி செஞ்சிருக்காரு. நல்ல வேளையா யாரு காப்பாத்தி கொண்டு வந்தாங்க.

ம் என்று சொல்லியபடி அவளை மேலும் பேச வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். 

சரிம்மா. இதுவரைக்கும் யாராவது உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருக்காங்களா. யாராவது இவரு மேல் உங்க வீட்ல புகார் செஞ்சிருக்காங்களா.

சார் இதுவரைக்கும் இவரு பண்ண கூத்தால இவருக்குத் தான் பிரச்சனையே. ஆனால் இது ஜாஸ்தியாட்டா யாருக்கு பிரச்சனை வரும்மோன்னு ரொம்ப பயமா இருக்கு.

சரி. இதுவரைக்கும் என்ன மருத்தும் செஞ்சிருக்கீங்க.

நிறைய டாக்டர் கிட்டே காட்டியாச்சு. அவரை புக் படிக்க விடாம பார்த்துக்கிட்டாச்சு. ஒரு பேப்பர் கூட கண்ணுக்கு படறதில்லை. ஆனா சின்ன விஷயம் படிச்சாலும் அவருக்கு ரொம்ப பாதிக்குது. யாராவது செத்திட்டாங்கன்னு படிச்சா இவரு அழுவ ஆரம்பிச்சிடராரு. எங்கேயாவது மலேரியா வந்தா இவருக்கு உடம்பு சூடாகிடுது.

சரி. ஒரு புத்தகம் படிக்கும்போதே அவருக்கு இந்த மாதிரி பாதிப்பு ஏற்படுதா அல்லது படிச்சு முடிச்சப்பிறகு இந்த மாதிரி ஆகாது.

அது சரியா தெரியலை சார். சில நேரத்தில பாதி புஸ்தகம் படிக்கும்போது இப்படி ஆகுது. 

குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதின புத்தகம் படிக்கும்போது ஆகுதா இல்லை....

யாரு எழுதினாலும் இப்படித்தான்.

இங்கிலீஷ் புக்கா தமிழா.

அவரு இரண்டு புக்கையும் படிப்பாரு.

இந்த பாதிப்பு எத்தனை மணி நேரம் நீடிக்குது. 

சில சமயம் 20-30 நிமிஷத்திலே சரியாயிடுத்து. சில நேரம் இரண்டு மூணு நாள். சில சமயம் வாரம் கூட. அன்னிக்கு போலீஸ்ல அடி வாங்கின உடனேயே சரியாயிடுத்து. இல்லை எல்லாரும் சேர்ந்து திட்டினா சரியாயிடுத்து.

இவரு அந்த மாதிரி நேரத்தில உங்களை அடையாளம் தெரிஞ்சிக்கிறாரா.

அவருக்கு எங்களை பார்த்தா யாருன்னு தெரியுது. ஆனாலும் ஒரு மூணாவது மனுஷனை பார்க்கறமாதிரி தான் பார்க்கறாரு.

அப்ப நீங்க ஏதாவது பேச்சுக் கொடுத்தா பதில் கொடுக்கறாரா.

இல்லை சார். எந்த காரெக்டரா இருக்காரோ அந்த காரெக்டர் மாதிரி தான் பதிலும் வரும்.

ம்ம். 

இது எத்தனை நாளா இருக்கு.

மூணு வருஷமா சார்.

ஏதனால அவருக்கு வேலை போச்சு.

நானோ டெக்னாலாஜில கண்டுபிடிக்கற நானோ பாட்ஸ்னால உலகம் அழியபோகுதுன்னு அப்படிங்கற மாதிரி ஏதோ புக் படிச்சிருக்காரு அதுக்கு மறுநாள் ஆபீஸூக்கு போய் லாப்பெல்லாம் உடைக்க ஆரம்பிச்சிட்டாரு. புத்தி ஸ்வாதீனம் இல்லையின்னு வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க.

சரிம்மா. நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. கொஞ்ச நேரம் அவர் கிட்ட பேசிட்டு அப்புறம் உங்களை கூப்பிடறேன்.

----

அவர் எழுந்து வந்த கதவை திறந்தார். என்னை உள்ளே அழைத்தார். கயல் வெளியே வந்தாள். அவளை முறைத்துப் பார்த்தேன். அவள் முகம் தெளிவாக இருந்தது போல் இருந்தது. அவள் என்ன பேசியிருப்பாளோ என்று என் முகம் தான் குழம்பி போயிருந்தது. 

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி