தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 8

8

மோகன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். இது அவனுக்கு புதிய வேலை. ஒருவர் கதை சொல்லி அதை எழுதுவது. கதை எழுதுவது என்பது ஒரு கைதேர்ந்த மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சை போன்றது. மருத்துவருக்கு அனைத்து அத்தியாயங்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். சிகிச்சை ஆரம்பித்த பிறகு நடுவில் இதயத்தை அறுப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க முடியாது. அல்லது கடைசியில் எப்படி முடிக்கப் போகிறோம் என்று நடுவில் திணற முடியாது.

கதையாசிரியருக்கும் அதே நிலைமை தான். ஒரு வரி கதை கொண்டு எழுது ஆரம்பிப்பது என்பது வியாபார ரீதியாக எழுத தான் முடியும். மாதம் ஒரு முறை பாக்கெட் நாவல் எழுதுவது இந்த ரகம். Quantity இருக்கும் Quality இருக்காது. அது போலவே எழுதுவதை தொழிலாக கொண்டு எழுதுபவர்களும். இந்த பிரசுரத்திற்கு எழுதி தரவேண்டும் அந்த பிரசுரத்திற்கு எழுதி தர வேண்டும். எதை எழுதினாலும் படிப்பார்கள். எதை எழுதினாலும் வெளியிட்டு விடுவார்கள். ஒரு தடவை பெயர் கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நாமே வெளியிடும் போது தரம் நாம் சொல்லும் தரம் தான். இப்படி பல விதங்கள்.

தொலைகாட்சி தொடர்கள் எப்போதும் இந்த ரகத்தை சேர்ந்தவை. கதை எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொண்டே போகும். மக்கள் மத்தியில் பெயர் கிடைத்துவிட்டதென்றால் இன்னும் கொஞ்சம் இழுக்கலாமே என்று இயக்குனர் சொல்ல கதையாசிரியர் பேனாவில் மை நிரப்ப ஆரம்பித்துவிடுவார். பிறகு தயாரிப்பாளர் விளம்பரதாரருடன் TRP rating வைத்து வியாபாரம் செய்ய துவங்குவார்.

மோகன் எழுதும் இந்த கதைக்கு பிரசுரகர்த்தா தேவையில்லை. அச்சு வேலை இல்லை. ஏனென்றால் இதற்கு ஒரே ஒரு வாசகன் தான். கதிர் எனும் கதிரவன். அவனும் படித்து கருத்திடப் போவதில்லை. படிப்பவனுக்கு இதை எழுதியது மோகன் எனும் எழுத்தாளன் என்று தெரியப்போகிறதா என்பதும் தெளிவில்லை.

இது ஒரு மருந்து. முதல் முறையாக மருந்து தயாரிப்பில் ஒரு பகுதி நேர எழுத்தாளன். இணையத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வளரும் ஒரு எழுத்தாளன். இவனுக்கு இவனுடைய கதைகள் அச்சில் ஏறி பார்த்து பழக்கம் இல்லை. அதனால் image எனும் தொல்லையும் இல்லை. விரும்பியதை எழுதுவான். படித்தால் படிப்பார்கள். படித்தவர்கள் கருத்திட்டால் இடுவார்கள். இல்லையென்றால் இல்லை.

ஆனால் இங்கு இவனுக்கு ஒரு பிரச்சனை. கதை அத்தியாயம் ஒவ்வொன்றாக எழுத வேண்டும். முடிவு என்ன என்று இவனுக்கே தெரியாது. இது ஒரு வரி கதையின் கருவை விட மோசம். இதற்கு முன் இவன் மனதில் தோன்றிய பல கருக்கள் கதையாகாமலேயே மறைந்துவிட்டிருந்தது. காரணம் இதை எங்கோ படித்தது போல் இருக்கிறது, இது ஒரு ஆங்கிலப் படத்தில் வந்த கதை மாதிரி இருக்கிறதே இதுபோலவே முன்னொரு முறை ஒருவர் எழுதியிருக்கிறாரே என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று ஒரு பயம் தான். இதனாலேயே பல ஆண்டுகளாக கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். சில பிரபல எழுத்தாளர்களின் கதைகளை பற்றி பிறர் பேசுவதையும் கேட்பதை தவிர்ப்பான். பாதிப்பு எந்த வகையில் படிப்பவர்கள் மீது ஏற்படுகிறதோ அதே பாதிப்பு எழுதவர்கள் மீதும். எழுதுபவர்களே வாசகர்களாக மாறும் போது இந்த தாக்கம் அதிகம். காரணம் இப்படி எழுதுவாரோ அப்படி எழுதுவாரோ என்று கதையின் போக்கை அறியும் ஆவல் எழுத்தாளர்களுக்கு அதிகம்.

முடிவு தெரியாமல் கதை எழுத மோகன் தயாராக இல்லை. முழுவதும் கேட்ட பிறகு எழுதுகிறேன் என்று சொன்னால் டாக்டர் ரதீஸன் அதற்கு தயாராக இல்லை.

நடு நடுவில் டாக்டர் இப்படி எழுதினால் என்ன என்று ஆர்வக் கோளாறில் கேட்கப்போக மோஹன், நான் சொன்னதை மட்டும் எழுதுங்க. இது நீங்க எழுதற கதையில்லை. நான் சொல்லி நீங்க எழுதற கதை. நான் டாக்டர் வேலையை செய்யறேன் நீங்க எழுத்தாளர் வேலையை செய்யுங்க என்றார்.

டக்கென்று மோகனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து, தப்பா நினைச்சிக்காதீங்க மோஹன், கதை எழுதறது ஒரு அறுவை சிகிச்சை செய்யற மாதிரி என்று துவங்கி மேல் சொன்ன லெக்சரை மீண்டும் சொன்னார். எனக்கு மட்டும் தான் கதையோட முடிவு தெரியனும். அப்பத்தான் நான் செய்யற ட்ரீட்மெண்ட் சரியா வரும். தயவு செஞ்சி இதை சென்சேஷனலைஸ் பண்ணிடாதீங்க. காரியம் கெட்டுப்போயிடும் என்று பொறுமையாக சொன்னார்.

புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.

தன்னுடைய வாழ்கையில் அவருடைய ஆரம்ப காலம் முதல், படித்தது, பட்டம் பெற்றது, முதல் நோயாளியை அவர் பரிசோதனை செய்தது என்று மெல்ல ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டும் லாவகத்துடன் தன்னுடைய அனுபவங்களை சொல்லி வந்தார்.

ஓ ஒருவேளை கதை எழுதுவது ஒரு கட்டிட கலைஞனின் வேலை போன்றதோ. நல்ல பலமான அடித்தளம் அமைத்து மெதுவாக தளங்களை அமைத்து பிறகு கடைசியில் வெள்ளையடித்து அலங்காரம் செய்து இதோ தயார் என்று சொல்லும் வேலை போலத்தானோ என்று அவன் மனதில் தனியாக ஒரு பாதையில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து சட்டென்று மீண்டு மீண்டும் அவருடன் இணைந்தான் மோகன்.

அவருடைய செல்பேசி ஒலித்தது. என்ன என்றார் சற்றே பதட்டத்துடன். என்ன தான் எதற்கும் பதற்றம் கூடாது என்று அறிவுரை செய்யும் மனோதத்துவ நிபுணராக இருந்தாலும் மனித நேயம் உள்ளிருந்து தலைகாட்டியது.

மோஹன், கதிரை காணோம். என்னோட கொஞ்சம் வர முடியுமா என்றார்.

ஞாயித்து கிழமையும் வெளியே போயிட்டா நான் என்ன செய்யறது என்று தன் மனைவியின் குரலை நாடா இல்லாமலே ஒலி பெருக்கி மூலம் கேட்டது போல் இருந்தாலும் அதை ஒடுக்கிவிட்டு சரி டாக்டர் என்று சொல்லி தன் நீல நிற மாருதி 800ஐ நோக்கி ஓடினான். அவர் காரை சுற்றி வந்து ஏறி அமர்ந்தார்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி