தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 7

7
மருத்துவர் ரதீஸனின் சோதனைக்கு நான் பலியான கதை சொல்லியே ஆக வேண்டும். பல பிரச்சனைகளை சந்தித்தபின்னும் நான் குணா கமல் குண்டக்க மண்டக்க பார்த்தீபன் அந்நியன் விக்ரம் என்று என் காதுபட பட்டப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தவர்கள் ஒரு புறம் இருக்க நானாக போய் ஏதாவது படிக்கப் போய் மாட்டிக் கொண்டு நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்க, எதுவுமே வேண்டாமடா என்று எதையும் படிக்காமல் சில நாட்கள் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து அதை நான் படிக்க வேண்டும் என்றும் அவர் என்னையும் என்னில் ஏற்படும் மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க அவருடைய விருந்தனர் அறையிலேயே என்னை தங்கவும் சொல்லியிருந்தார்.

நோயிலிருந்து முற்றிலும் விட பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் மறுபுறம் என்னை பார்த்த தினமும் வருந்தும் பெற்றோர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் என்னை உந்தித் தள்ளியது. அவர்களுக்கு வந்திருப்பதும் ஒரு நோய் தான். மகனாக நான் பிறந்த நோய். இந்த இரண்டு நோய்களும் குணமாகி மறுபடியும் என்னை தாழந்து பார்த்தவர்களை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற வெறி உருவாகியிருந்த்து. அதனால் ரதீஸன் சொல்லும் எந்த சோதனைக்கும் நான் தயாராக இருந்தேன்.

அவர் கொடுத்த புத்தகத்தை படித்ததால் வந்த வினை இதோ.
---
தோலில் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு ஒருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். வணக்கம் வக்கீல் சார்.

வணக்கம்.

உங்க பேரு.

நான் வக்கீல் சீனிவாசன். என்ன பிரச்சனை சொல்லுங்க என்று கையில் இருந்த கருப்பு அங்கியை சரி செய்துக் கொண்டே கேட்டேன்.

சார் தெருவிலே விளையாடிக்கிட்டு இருந்த ஒரு கொழந்தையை என் தம்பி பைக் ஏத்தி கொன்னுட்டான்.

அடப் பாவமே.

அதுக்கு அந்த தெருவில இருந்த எல்லாரும் சேர்ந்து என் தம்பியை அடிச்சு துவைச்சிட்டாங்க. அவன் இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான்.

ஐய்யோ. அடி பலமா.

இல்லை சார். கண்ணு முழுச்சிகிட்டான். ஆனா இப்ப அந்த கொழந்தையோட அப்பா என் பையன் மேல கேஸ் போட்டுருக்காரு. நீங்க தான் ஏதாவது செஞ்சி அவனை காப்பாத்தனும்.

ஓ. அப்படியா. விபரங்களை கொடுங்க. கேஸை எடுத்துக்கலாம்.
இப்படி நான் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு காவல் அதிகாரி என்னை நோக்கி வந்தார்கள்.

யெஸ் இன்ஸ்பெக்டர். என்ன வேணும்.

கொஞ்சம் தனியா வரீங்களா என்று என் தோளை அமுக்கி ஒரு ஓரத்திற்கு அழைத்து சென்றார் அந்த இருவரில் ஒருவர்.

சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.

நீங்க எந்த வருஷம் சட்டம் முடிச்சீங்க.

வருஷம்....

நீங்க பார் அஸோசியேஷன்ல மெம்பரா

ம்ம்.

எத்தனை வருஷமா லா ப்ராக்டீஸ் பண்றீங்க.

நீங்க எதுக்கு கேட்கறீங்க இதெல்லாம்.

சார் நீங்க லாயரே இல்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.

என்ன விளையாடறீங்களா. நான் லாயர் சீனிவாசன். மெட்ராஸ்ல பெரிய வக்கீல். யாரை வேணாலும் கேட்டுப்பாருங்க.

உங்க சர்டிபிகேட்ஸ் காட்டறீங்களா. வாங்க உங்க வீட்டுக்கு போகலாம் என்று என்னை இழுக்காத குறையாக இழுந்து சென்று ஹயூண்டையில் ஏற்றினார். சில நிமிடங்களில் என் வீடு என்று சொல்லி எங்கோ அழைத்துச் சென்றனர்.

வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு இள வயது பெண்ணும் தென்பட்டனர். அந்த அம்மா என்னை ஓடி வந்து கதிரு இப்ப என்னடா செஞ்சித் தொலைச்சே ஏன்டா போலீஸ் வந்திருக்கு என்ற அழுதுக் கொண்டே வந்து என்னை கட்டிக் கொண்டார்.

யாரு கதிரு என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த காவல்
அதிகாரி, அம்மா இவங்க உங்க பையனா.

ஆமாம் சார்.

என்ன படிச்சிருக்காரு.

எம் எஸ் சி மைக்ரோ பயாலஜி என்று அந்த இளம் பெண் பதிலளித்தாள்.

நீங்க யாரு.

சார் என் பேரு கயல்விழி. இவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

அம்மா, இவரு மைக்ரோ பயாலஜி படிச்சிருக்காருன்னு சொல்றீங்க. இவங்க கதிருன்னு சொல்லி கூப்பிட்டாங்க. இவரோ வக்கீல் சீனிவாசன்னு சொல்லிகிட்டு கோர்ட்ல கேஸெல்லாம் எடுத்துகிட்டு இருக்காரு. என்னம்மா பிரச்சனையெல்லாம்.

சார் என்று அந்த பெண் கயல்விழி ஏதோ சொல்ல முயலும் போது வெள்ளை நிற மாருதி சட்டென்று வந்து நிற்க அதிலிருந்து அறுபது வயது கொண்ட ஒருவர் வந்திருங்கினார்.

காவல் அதிகாரியை பார்த்து கையசைத்தார். என்னை வைத்து அந்த குடும்பத்தை அலசிக் கொண்டிருந்து இரண்டு காவல் அதிகாரிகளும் சட்டென்று அங்கிருந்து விலகினர்.

அந்த அறுபது வயது பெரியவர் கையிலிருந்த பெட்டியை எடுத்து ஒரு ஊசியை எடுத்து என் கைகளில் செலுத்தினார். மெதுவாக கண்கள் இறுக்க நான் மயங்கி விழுந்தேன்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி