தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 3

3
கஜேந்திரனை தீர்த்துக் கட்டினால் தான் ராதிகாவின் பிரச்சனை தீரும். ராதிகாவை கோர்ட்டுக்கு இழுப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம்.

கஜேந்திரன் எங்கே போகிறார் எங்கே வருகிறார் என்று எல்லா விஷயத்தையும் சேகரித்துவிட்டேன். நாளைக்கு அவர் மெரினாவில் ஜாக்கிங் செய்ய வரும் போது அவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான்.
அதற்கு முதலில் எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும். சைலன்ஸரோடு கிடைச்சா நல்லா இருக்கும். ராயபுரத்துல போனா கிடைக்கும். இன்னிக்கி ராத்திரி போய் அதை வாங்கிக்கனும். ஒரு லட்சம் ஆகலாம்.

எனக்கு உடலில் முறுக்கேறியது. உடனே வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ஆட்டோவை பிடித்தேன். ராயபுரம் சென்றடைந்தேன். அங்கிருந்து சிறிய சந்துக்களில் நுழைந்து தேடினேன். எங்கே கிடைக்கும் துப்பாக்கி.

கறுப்பாக குண்டாக லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு ஒரு மீன்பாடி வண்டியில் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். சட்டென்று அவனை நிறுத்தினேன்.

எனக்கு சரக்கு வேணும் என்றேன் படபடப்புடன்.

என்ன சரக்கா. என்ன சரக்கு?

துப்பாக்கி.

யோவ். என்னய்யா வெளையாடறியா. நான் மீன் விக்கற ஆளுப்பா.

உனக்கு யாரையாவது தெரியுமா. எனக்கு துப்பாக்கி வேணும். அர்ஜன்ட்.

வேற ஆளைபாருய்யா என்று அவன் அகன்றான்.

நான் பரபரப்புடன் தேடினேன். யார் கொடுப்பார் எனக்கு துப்பாக்கி. கஜேந்திரனை தீர்த்துக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் ராதிகா கோர்ட் ஏற வேண்டியிருக்கும்.

என்னை தாண்டி அந்த ஆள் போனதையும் அவன் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியிடம் பேசியதை நான் கவனிக்க வில்லை.

இன்னும் சந்துக்களில் நுழைந்து பலரிடம் கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்லவில்லை.

மெல்லிய உருவத்துடன் கறுப்பு நிற சட்டையும் காக்கி நிற கால் சட்டையும் அணிந்த ஒருவன் என்னருகில் வந்தான்.

என்ன வேணும்.

சரக்கு.

சரக்குன்னா கஞ்சாவா

இல்லை இல்லை. துப்பாக்கி வேணும். சைலன்ஸரோட கிடைச்சா நல்லாயிருக்கும்.

எத்தனை ரூபாய் வைச்சிருக்கே.

எத்தனை ரூபாய் ஆகும்.

அது ஆகும் 60-70 ஆயிரம். உன் கிட்ட லைசன்ஸ் இருக்கா.

லைசன்ஸா. இல்லை.

லைசன்ஸ் இல்லைன்னா. திருட்டு துப்பாக்கி வேணுமா.

ஆமா. இங்கே கிடைக்கும்னு சொன்னாங்க.

யார் சொன்னாங்க.

எனக்கு தெரியும்.

சரி. எதுக்கு வேணும் துப்பாக்கி உனக்கு.

அது உனக்கு தேவையில்லாத விஷயம்.

சரி என்னோட வா என்று என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தான். சட்டென்று ஒரு ஆட்டோவில் என்னையும் ஏற்றிக் கொண்டு அவனும் ஏறி அமர்ந்தான்.

எங்கே போறோம்.

துப்பாக்கி வேணுமில்லையா.

ஆமா.

அப்ப பேசாம வா.

சிறிது நேரத்தில் ராயபுரம் காவல் நிலையத்தில் ஆட்டோ வந்து நின்றது. என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொண்டு இறங்கி ஓடும் முன் இன்னும் இருவர் வந்து என்னை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சிறைக்குள் தள்ளிவிட்டு மேலதிகாரியை அழைத்து வந்தனர்.

டேய். யாருடா நீ. உன் பேர் என்ன.

கதிர். கதிரவன்.

யாரை போட்டுத்தள்ள போற.

யாரையும் இல்லை.

அப்புறம் எதுக்கு உனக்கு துப்பாக்கி என்று சொல்லி காலால் என்னை
எட்டி உதைத்தார்.

யாரை போட்டுத்தள்ளப்போற.

கஜேந்திரன்.

யார் கஜேந்திரன்.

அவரு ராதிகா வேலை செய்யற கம்பெனியில் மானேஜர்.

யாரு ராதிகா.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் குழம்பினேன்.

உன் வீட்டு நம்பர் என்ன.

சொன்னேன்.

சிறிது நேரத்தில் என் அம்மா அப்பா கயல் அவருடைய அண்ணன் அனைவரும் வந்திருந்தனர்.

அவர்கள் வருவதற்கு முன் இன்னும் பல அடிகள் வாங்கினேன்.
காவல் அதிகாரியிடம் பேசி என்னுடைய மருத்துவ சான்றிதழ்களை காட்டி வெளியே அழைத்து வந்தனர்.

கயலுடைய அண்ணன் என்னைப்பார்த்து கத்தி தீர்த்தான். என் தந்தை தாயை திட்டினான். என்னை வீட்டில் பூட்டி வைக்கச் சொன்னான்.

கயல் இன்னொரு தடவை இந்த பைத்தியத்தோட சகவாசம் வைச்சிகிட்டே அவ்வளவுதான் உன் கதை என்று கையை உயர்த்தி அதட்டினான். அவளை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று காயத்திருக்கு மருந்திட்டு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என் பெற்றோர்.


தொடரும்....

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி