ஞானி -11. ஞானி மீண்டும் ஒரு சந்திப்பு

ஞானி -11. ஞானி மீண்டும் ஒரு சந்திப்பு
பல வருடங்களுக்கு பிறகு ஞானியை சந்கிக்கிறேன். அவனிடத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் நான் முன் தலையில் முடி இழந்து கண்கள் சுருக்கடைந்து முப்பதில் மூப்படைந்திருந்தேன்.

“நண்பா உயிருடன் தான் இருக்கிறாயா?” வழக்கமான ஞானித்தனம். அவன் என்னை நண்பன் என்று கூறியதே எனக்கு பெருமையாக இருந்தது.

“உயிர் மட்டும் தான் இருக்கிறது. நீ எப்படி?” என்றேன்.

எப்போதாவது என் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறானா இப்போது சொல்ல.

“பதவி உயர்வு பெற்றுவிட்டாய். பிறகு ஏன் கவலை?”

“படிப்பு வேலை சம்பளம் மனைவி மக்கள் என்று அனைத்தும் பெற்றுவிட்டேன். இதற்கு பிறகு? என் வாழ்வில் செய்ய என்ன மீதம் இருக்கிறது?”

“ஏன் பிள்ளைகள் படிப்பு அவர்களின் திருமணம் இல்லையோ?”

“என் சம்பளம் அவர்களை கவனித்துக் கொள்கிறது. உணவு உடை இடம் செலவு செய்ய பணம். சம்பளம் குறைவாக இருந்தபோது இருந்த மகிழ்ச்சி இல்லை”.

“கார் மாளிகை?” கேட்டான் ஞானி கிண்டலாக.

“ஆம். ஒருவரை ஒருவர் கண்டு உறையாட தடைகள்”.

“பிறகு எதற்காக இவ்வளவு உழைத்தாய் நீ?”

“ஞானி நீ என் வளர்ச்சியை கண்டவன். அப்போது இவைகளை அடைவதே வாழ்கை என்றிருந்தேன். இப்போது அடைய ஒன்றுமே இல்லை என்பது போல ஒரு எண்ணம். என்ன செய்ய?”

“இதற்காகவே யாம் திருமணம் செய்து கொள்ளவில்லை”. பழைய ஞானி.

“திருமணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

மௌனமானான் ஞானி.

“தீர்வு சொல் ஞானி”. பவ்யமான மாணவனாக நான் நின்றிருந்தேன்.

“வாழ்வை உயிருள்ளதாக செய்ய ஏதாவது ஒரு நோக்கம் கொள். பணம் உயர்வாழ்வு இவையெல்லாம் ஒரு நோக்கமே அல்ல. தீர்வு உன் கையில”;.

அகன்றான் ஞானி.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி