ஒரு மாணவன் எழுந்து ஞானியை நோக்கி பழைய பழக்கவழக்கங்களையும் கோட்பாடுகளையும் எதிர்ப்பது தவறு என்கிறீர்கள். அப்படியென்றால் எல்லா பழைய கருத்துக்களும் சரியா என்று கேட்டான்.

நான் கேட்க வேண்டிய கேள்வி என்று மனதில் நினைத்துக் கொண்டேன். 

எல்லா பழைய கோட்பாடுகளும் சரியல்ல என்றான் ஞானி.

எப்படி அதை நாம் அறிவது என்று மீண்டும் கேட்டான் ஞானி.

தம்பி, பழைய கருத்துக்கள் என்னென்ன என்று பட்டியல் இட்டு எது சரி எது தவறு என்று என் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமே வேண்டாம் உனக்கு. நீயே அறிந்துக் கொள்ள ஒரு சுலபமான வழி கூறுகிறேன், கேள்.

உன்னுடைய மனதையும் உடலையும் நேரடியாக பாதிக்கும் முந்தைய பழக்கங்களை விட்டுவிடு.
மற்றவரின் மனதையும் உடலையும் நோகடிக்கும் எந்த கோட்பாடுகளையும் காற்றில் விடு.
ஒவ்வொரு பழக்கவழக்கமும் எந்த காலத்தில் தோன்றியது, அது வர சூழல் என்ன, அதே சூழல் இப்போதும் இருக்கிறதா, அப்படி அதே சூழல் இப்போது இல்லையென்றால், அந்த பழக்கம் விடப்படவேண்டிய ஒன்று தான். 

மனிதன் எதை கழிக்கவேண்டும் எதை கூட்டவேண்டும் என்று அறியாமல் நல்லவற்றை காற்றில் விட்டும் தீயவற்றை கொண்டாடியும் வருகிறான். முன்னோர் கூறியதை மறுத்தால் தான் நீ புதிய சந்ததி என்று எண்ணாதே. அது போல முன்னோர் கூறியதை நீ அப்படியே ஏற்காதே.

உதாரணமாக, 20 வருடங்களுக்கு முன் என் வீட்டில் இறைவன் வந்தருளினார். இந்த தபால் அட்டையை 7 பேருக்கு அனுப்பினால் உன் வீட்டில் நல்லது நடக்கும். இல்லையென்றால் உன் வீடு எரிந்து விடும் என்ற எழுதி அனுப்பினார்கள் பித்தர்கள். 10 வருடங்களுக்கு முன் இதே விஷயத்தை மின்னஞ்சல் மூலம்  இமெயில் எழுதி அனுப்பினார்கள். இப்போது இதே விஷயத்தை குறுந்தகவல்  எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறார்கள். ஆக விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் ஞானம் வளர்க்கவில்லை.

முன்பு தபால்துறைக்கும், பிறகு இணைய சேவை நிறுவனத்திற்கும், இப்போது செல் சேவை நிறுவனத்திற்கும் தான் காசு சேர்க்கிறதே தவிர யாருக்கும் இதனால் லாபமில்லை. 

தபால் அட்டை எழுதினாலே பணமும் நல்ல உடலும் கிடைக்கும் என்றால் அனைவரும் இதையே செய்யலாமே. இது ஒரு மூட நம்பிக்கை. இதை எப்படி நாம் அறிவது. இதை நாம் ஒரு தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு எழுதினால் அவர் அதை வேறு வழியின்றி பின்பற்ற வேண்டிவரும். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அல்லவா. அதனால் இதை நீ செய்யாதே.

இது போலவே அனைவரும் கைகளில் பல நிற கற்கள் அணிந்தால் சிறப்பாக ஆகலாம் என்று அணிந்து வருகிறார்கள். இவர்களை பார்த்து நான் கேட்பது இது தான். ஏன் கற்களை அணிந்துக் கொண்டு வேலைக்கு வருகிறீர்கள். வீட்டிலே அமர்ந்து நல்ல காலம் எதிர்பார்ப்பது தானே. 

ஆக எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து உன் மனம் தெளிவாகும்படி நடந்துக் கொள். உன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடு. ஞானம் உள்ள சமுதாயத்தை உருவாக்கு