மலரும் நினைவுகள்: பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்



பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்


சூரியனுக்கும் எனக்கும் ஆகாதென்று பலருக்கு தெரிந்திருக்கும். இரவு வெகுநேரம் கணினியில் நோண்டிவிட்டும், புத்தகங்களில் புகுந்துவிட்டும், டிவியில் இனி நிகழ்ச்சிகளே இல்லை என்று அறிவிப்பாளர்களே திட்டிய பிறகும் தான் படுக்க செல்வது வழக்கம்.
I'm Not a Morning Person, To Get-up At 5.00 There is No Reason என்று கவிதையே புனைந்ததும் உண்டு.
அலுவலகத்திலேயே தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. நீ வேலையை செஞ்சா போதும் எனும் அளவிற்கு. Access Control Proximity Card என்றாவது நான் 8 மணிக்கு வந்ததாக வருகை பதிவாகியிருக்கிறதா என்று கேட்டால் கண்ணீர் மல்கும்.

இவ்வாறான பின்னனியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நான் நேற்று பிற்பகுதி கிரிகெட் மேட்ச் பார்க்காமல் வாழ்வில் ஒரு பெரிய பாவத்தை செய்ய இருந்தேன். அதனால் இரவு ஹைலெட்ஸ் பார்த்து கங்கா ஸ்நானம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து நியோஸ்பார்ஸ்ட தொலைகாட்சியை தட்டினால் அவர்களோ பந்து பந்தாக முழு ஆட்டத்தையும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.



சரி சில விக்கெட்டுகள் விழும் வரையில் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே சோபாவில் உறங்கிவிட்டேன். நான் எவ்வளவு தான் சோம்பேறியாக இருந்தாலும் சோபாவில் தூங்கும் வழக்கம் இல்லை. அது எப்போதாவது வெள்ளிக் கிழமை மதிய நிகழ்ச்சி பார்த்து தூங்கினால் தான் உண்டு.



நன்றாக தூங்கிவிட்டு சட்டென்று எழுந்தால் டிவி ஓடிக் கொண்டிருக்க முழு ஆட்டமும் முடிந்துவிட்டிருந்தது. மணி என்னடா வென்று பார்க்கலாம் என்றால் மொபைல் போனை இன்னொரு அறையில் சார்ஜிங்க செய்ய போட்டிருந்தேன். சரி NDTV வைத்து பார்த்தால் மணி 5.32 என்று காட்டியது. அட நம்மூரில் 5.32 அப்படின்னா இங்கு 3 மணி தான் என்று பொறுப்பாக படுக்கையறைக்கு சென்றேன். தூக்கம் வராமல் திருதிருவென்று முழிக்க மீண்டும் சென்று மொபைல் போனில் நேரம் பார்த்தால் 5.42 என்று இருந்தது. அட NDTV Middle East ஒளிபரப்பாயிற்றே என்று வருந்தியவாறு எழுந்து அமர்ந்தேன்.



கணினியை இயக்கி வழக்கமாக இணையத்தில் செல்லும் 7 புனிதலங்களுக்கும் ஒரு பக்தி யாத்திரை செய்து பிரசாதம் பெற்றுவிட்டு பார்த்தால் இன்னும் நேரம் இருந்தது. சூடுநீர் பொத்தானை அழுத்திவிட்டு வணக்கம் தமிழகம் பார்த்துவிட்டு தென்கச்சி சுவாமிநாதனின் அறிவுரைகளை கேட்டுவிட்டு NDTV வியில் முஷாரிப்பின் சோக கீதம் பார்த்துவிட்டு மடமடவென்று குளித்து முடித்து, சீவி சிங்காரித்து தயாராகி வண்டியை நேராக சங்கீதா சைவத்திடம் விட்டேன்.



வடிவெலு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. என் பொண்டாட்டி கூடத்தான் சைவம். அதனால ஊரெல்லாமா போர்டு போட்டு வைக்கறது.



கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒலிக்க, சூடாக நெய் மணக்க பொங்கலும் வடையும் சிவப்பு சட்டினி, வெள்ளை தேங்காய் சட்டினியை உள்ளே தள்ளிவிட்டு, இன்னிக்கு மத்தியானம் அங்க போகலாம் என்று அங்கிருந்து மக்கள் பேசிய தேன் மதுர தமிழோசை காதில் கேட்டுக் கொண்டு, என்ன ஸ்ரீராம் தாடி வைச்சாச்சா, என்ன ரொம்ப பிஸியா என்று மேலாளரிடம் கதைத்துவிட்டு, 550 ஃபில்ஸ், சுமார் 55 ரூபாய் பில்லுக்கு காசு கொடுத்துவிட்டு வண்டியில் ஏறும் போது தோன்றியது - அடே நாலணா செலவில்லாமல் நுங்கம்பாக்கம் சங்கீதா போய் வந்துட்டோமே என்று.



வியாபாரமாக நினைத்து அவர்கள் செய்தாலும், பல்லாயிரம் மைல் தொலைவில் தமிழக சிற்றுண்டியை எங்களை போன்றவர்களுக்கு வழங்கி வரும் சங்கீதா போன்ற பல தமிழ் உணவகங்கள் செய்து வருவது சமூக சேவை என்று சொன்னால் அது மிகையாகாது.
இது தான் பஹ்ரைனில் ஒரு தமிழ் ப்ரேக்ஃபாஸ்டின் Moral of the Story.
 
-மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி