சிறுகதை: உறைந்த உறவுகள்

வியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை மற்றும் இலவச விமான பயணம் தாயகம் செல்வதற்கு. வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் விடுமுறைக்கு சென்றதோடு சரி. மூன்று வருடங்கள் ஆகியும் போகவில்லை. சென்ற முறை விடுமுறைக்கு தந்தையை விசிட் விசாவில் அழைத்து வந்திருந்தான் இரண்டு வாரங்களுக்கு.

இந்த முறை வந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தை நிச்சயமாக இருந்தார். உன் கல்யாணத்தை பாத்துட்டா நிம்மதியா சாவேன் என்பார் அவனுடயை 60 வயது தந்தை. அப்பா, நீ சாகப்போறின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்பான் இருபதெட்டு வயது குழந்தை. அவனுக்கு தந்தை என்றால் உயிர். இன்று அவருடைய நினைவு அதிகம் வாட்டியது.

அழைப்பு மணி அடித்து. கதவை திறந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தந்தை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்.

என்னப்பா திடீர்னு, தனியாவா வந்தே

ஆமான்டா உன்னை பாக்கனும்போல இருந்தது என்றார்

அவரை அப்படியே கட்டி தழுவினான். அவரும் அவனை உச்சி மோர்ந்தார்.
என்னப்பா என்னை கூப்பிட்டிருந்தா நான் ஏர்போர்டுக்கு வந்திருப்பேன்ல
உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே தான்.

இப்ப எந்த ப்ளைட்டுபா நம்ம ஊர்லேந்து. ஆச்சர்யமா இருக்கே.
அதுவா மஸ்கட்லேர்ந்து வந்து வந்தது.

பரவாயில்லை பா ஒரு தடவை துபாய் வந்துட்டு போயிட்டு எல்லா விஷயமும் தெரிஞ்சிகிட்டியே என்றான் மகிழ்ச்சியுடன்.

அவர் தன் கால்களிலிருந்து கட் ஷூவை விடுவித்துக் கொண்டார். சென்ற முறை வந்த போது வாங்கி தந்தான். அப்பா, துபாய்க்கு வரும்போது செருப்பெல்லாம் போட்டுட்டு வராதே. மானமே போயிடும். ஷூ தான் என்றான். அதற்கு அவன் தந்தையோ டேய் நான் லேசுல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது என்று பதில் தர, கவலைபடாதேப்பா இப்ப கட் ஷூ இருக்கு, செருப்பு மாதிரி போட்டுக்கெல்லாம் ஆனா ஷூ தான்.

அதுபோலவே சென்ற முறை ஜூயான்ட் மார்கெட்டில் 1000 திராமுக்கு பொருள் வாங்கினால் இலவசம் என்று ஒரு கைப்பை கொடுத்தார்கள், அதை எடுத்து வந்திருந்தார். சோபாவில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

உள்ளே ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான். படுக்கையறைக்கு சென்று வேட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.

நல்ல வேளையாக இன்று விடுமுறை என்பதால் வீட்டை நன்றாக சுத்தம் செய்து காலி மது பாட்டில்களை கறுப்பு பின் பாகில் போட்டு கீழே போட்டுவிட்டு வந்திருந்தான். அதுபோலவே ஆஷ்ட்ரேயையும் சுத்தம் செய்துவிட்டு வந்திருந்தான்.

என்னப்பா, இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. எனக்கு சந்தோஷத்துல ஹார்டே நின்னுடும் போலிருக்குது என்றான் ராசு, தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன்.

கண்ணனுக்கு போன் போட்டு நீங்க வந்துட்டீங்க சேஃபான்னு சொல்லட்டுமா என்றான். கண்ணன் அவனுடைய அண்ணன். ஒரு வயது தான் வித்தியாசம். அதனால் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள்.

வேண்டாம்பா விடு. ராத்திரி ஆயிடுத்து அங்கே. நாளைக்கு காலையிலே சொல்லலாம்.

அவன் தந்தை வேட்டியை மாற்றிக் கொண்டதும், அவன் படுக்கையை சரி செய்து கொடுத்தான்.

சாப்பிட்டியா

அது ப்ளைட்ல கொடுத்தாங்க. இப்ப பசிக்கலை.

அப்ப வந்து படு. களைப்பா இருக்கும்.

இருப்பா, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அம்மா ரொம்ப ஆசைபடறா.

அப்பா, உனக்கு களைப்பா இருக்கும். 9.30 மணி ஆயிடுத்து. இந்தா தண்ணி குடிச்சிட்டு படு. நாளைக்கு எனக்கு லீவ் தான். நிறைய பேசலாம் என்று அவர் சொல்லச் சொல்ல கேட்காமல் விளக்கை அணைத்தான். அதற்கு முன் அவருக்கு இரவில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வைத்து சிறிய தட்டுகளால் மூடினான்.

தன் வலது கையை அவர் மீது போட்டு அணைத்தபடி உறங்க துவங்கினான். சிறிய வயதிலிருந்து வந்த பழக்கம். அவரும் அவருடயை வலது கையால் அவன் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டார்.

அவனுக்கு சொர்க்த்தில் இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி. பாரேன் இந்த வயசிலேயும் தைரியமா கிளம்பி வந்துட்டாரே.

தனிமை விடுத்த பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ராசு.
திடீரென்று அவன் செல்பேசி அழைக்க விழித்தெழுந்தான். அண்ணா காலிங்க் என்று அந்த சின்ன திரையில் தோன்றியது. சரிதான் கண்ணன் போன் பண்ணி அப்பா நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டாரா என்று கேட்கத்தான் என்று நினைத்து, போனை எடுத்து சொல்லுடா கண்ணா என்றான்.

கண்ணனின் குரல் மறுபுறம் கரகரத்திருந்தது. அப்பா போயிட்டாருடா என்றான் அழும் குரலில். என்ன இவன் அப்பா வந்து சேர்ந்துட்டாரா என்று கேட்காமல் போயிட்டாரா என்கிறான் என்று நினைத்துக் கொண்டே, என்னடா உளர்றே, அப்பா தான் துபாய்க்கு வந்திருக்காரே என்றான்.

டேய் என்னடா உளர்றே. தண்ணி கிண்ணி போட்டுட்டியா. அப்பா நம்மளவிட்டுட்டு போயிட்டாருடா. எங்க முன்னாடி பிணமா கிடக்குறாருடா என்றான்.

அவனுக்கு பகீரென்றது. எத்தனை மணிக்கு என்றான் பதட்டத்துடன்.
நேத்து ராத்திரி 9.30 மணிக்கு என்றான் கண்ணன். நீ என்னமோ சொன்னியேடா என்றான் குழப்பமாக.

விடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவனுக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.

இரண்டு தண்ணீர் டம்ளர்களில் ஒன்று காலியாக இருந்தது. ஓடிச் சென்று சோபாவை பார்த்தான். அதில் அவர் கொண்டுவந்திருந்த சிவப்பு நிற ஜீயான்ட் பை இருந்தது. வெளியில் அவருடைய கட் ஷூ.

உடம்பில் மின்னல் பாய்ந்து செல்ல அவன் உறைந்து நின்றான்
-மோகன்

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி