ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 -8. கடவுளுக்கே காவல்

ஞானியும் சோனியும் - ஞானி பாகம் 4 -8. கடவுளுக்கே காவல்

வழக்கம் போல கடனுக்கு கோவிலுக்கு போகாமல் நிஜமாகவே கடவுளை காண தோன்றியதால் அன்று கோவிலுக்கு போனேன். அருகிலிருந்து பிள்ளையார் கோவிலுக்காவது சென்று வரலாம் என்று போனவன் என்னையும் அறியாமல் பெருமாள் கோவில் வாசலில்.

என்ன சோனி எப்படி இருக்கே

பலே

சட்டென்று அவனுடைய திருவோட்டை எட்டி பார்த்தேன். இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு சில ஒரு ரூபாய் நாணயங்கள். 

என்ன வசூல் கம்மியா இன்னிக்கு?

ஆமா. இன்னிக்கு கூட்டம் கம்மி தான்.

அப்ப நேத்து முந்தாநேத்து இதுக்கு முன்னால கிடைச்சதெல்லாம்

அட நான் என்ன உன்னை மாதிரி குடும்பஸ்தனா, புள்ளையா குட்டியா வீடா வாசலா வாகனமா கடனா. அந்நியன்னிக்கு வசூலாகறதை செலவு பண்ணிடுவேன்.

உன் செலவை விட ஜாஸ்தியா வசூலாயிடிச்சின்னா

அதை உண்டியலில் போட்டுடுவேன்

என் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்தை வெளிப்படையாக காட்டினேன். ஞானி ஸ்டைலில் என்னை அசட்டை செய்தான் சோனி.

ஒரு விஷயம் சொல்லு சோனி. இத்தனை புத்திசாலியா இருக்கே ஏதாவது வேலை வெட்டி செய்யக் கூடாதா.

வேலை செஞ்சிகிட்டுதானே இருக்கேன்.


என்ன வேலை செஞ்சிகிட்டு இருக்கியா

ஆமா

என்னடா இது குண்டை தூக்கி போடுகிறான். ஏதாவது டிடெக்டிவ் வேலையா என்று வியந்தேன்.

எங்கே

இங்க தான்

பிச்சை எடுக்கறது ஒரு வேலையா

நான் பிச்சை எடுக்கறதை சொல்லலை

பின்னே

நான் தான் பெருமாளுக்கு காவல்.

ஹா ஹா. உலகத்தை காக்கற பெருமாளுக்கே நீ காவலா. நல்ல தமாஷூதான்.

சிரிக்கிறியா நீ. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என்னோட ஒரு பெரியவர் இருந்தாரு. ஒரு நாளு ராத்திரியிலே உள்ள இருந்த ஐம்பொன் சிலையை நாலு பேரு திருடிகிட்டு ஓடப்பாத்தாங்க. ஏய் புடிடா புடிடான்னு கத்திக்கிட்டே அந்த பெரியவர் ஓடினாரு. நாங்களும் ஓடினோம். சிலையை வச்சிருந்தவன் காலை புடிச்சிகிட்டாரு பெரியவரு. அவன் அவரோட கழுத்தை மெதிசிட்டான். அப்புறம் நாங்கெல்லாம் திருடங்களை புடிச்சி சிலையை காப்பாத்திட்டோம். சாவற நேரத்துல அந்த பெரியவரு சொன்னாரு, தம்பி, நாமெல்லாம் பிச்சைக்காரங்க இல்லை. உலகத்தை பெருமாளு காப்பாத்தறாரு, நாம பெருமாளை காப்பாத்தறோம் அப்படின்னு.
அந்நிலேர்ந்து நான் பெருமாளுக்கு காவல் காரன். எனக்கு சம்பளம் கொடுக்கறது உங்களை மாதிரி ஆளுங்க.

ஞானியும் சோனியும் பேசி முடித்த பிறகு நான் என்றாவது பேசியிருக்கிறேனா. இனம் புரியாத ஒரு உணர்ச்சியுடன் அவன் 8 ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கியை உண்டியலில் போட்டுவிட்டு அருகிலிருந்த உணவகத்தை நோக்கி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். வெகு நேரமாய்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி