Wednesday, July 31, 2013

ஞானி பாகம் 3 - 7. இருந்த இடம் நல்ல இடம்

ஞானி பாகம் 3 - 7. இருந்த இடம் நல்ல இடம்

கிழிசல் சட்டையுடன் பல நாள் வளர்த்த தாடியுடன் ஒருவனை கண்டேன். கிட்டத்தட்ட ஞானியை போல் இருந்தான். என்ன ஏதாவது டபுள் ரோலா என்று ஓடிச் சென்று பார்த்தேன்.

நீ ஞானியா.....

ஆம் ஞானி தான் என்றான்.

என்ன விளையாடுகிறாயா. ஏன் இந்த வேஷம் என்று அவனை கேட்கும் முன்பே உணர்ந்துவிட்டேன் அவன் நம்ம ஞானி இல்லை என்று. 

அவனை பேசி சமாதானப்படுத்தி முடி திருத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கட்டிங் ஷேவிங் செய்ய சொல்ல அருகிலிருந்து துணி கடையில் கால் சட்டை மேல் சட்டை எல்லாம் வாங்கி கொடுத்து பிறகு அருகில் இருந்த ஆனந்த பவனில் முழு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்.

கை கால் நன்றாகவே இருந்தது அவனுக்கு. பேசுவதற்கு பதில் கொடுத்ததால் காதும் வாயும் நன்றாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். வயது 35 இருக்கும் போல. 

நீ ஏன் இப்படி திரிகிறாய் என்று கேட்டேன்.

மௌனமாக இருந்தான். சரி அவன் வாழ்வில் என்ன பிரச்சனையோ என்று தள்ளிவிட்டு பணம் கொடுத்தால் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்வாயா என்று கேட்டேன்.

அவன் பலமாக தலையாட்டினான். அருகிலிருந்து தானியங்கி வங்கிக்கு சென்று 5000 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தேன். இனிமேலும் பிச்சைக்காரனாய் திரியாதே. நல்லபடியாக இரு என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஒரு பெரிய திருப்தி மனதில் நிலவியது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டு அவனை வேறொரு இடத்தில் பார்த்தேன். மீண்டு வளர்ந்துவிட்ட தாடி. பழைய கிழிசல் சட்டையுடன் சிக்னலில் உட்கார்ந்திருந்தான். அருகில் இருந்த பையில் நான் வாங்கி தந்த கால் சட்டை தன் காலை நீட்டியிருந்தது கண்ணுக்கு பட்டது. பையில் நான் கொடுத்த பணத்தின் வீக்கம் தெரிந்தது. எனக்கு வந்தது கோபம். ஓடிச் சென்று ஒரு அறை விட்டிருப்பேன். ஆனால் வண்டியை நிறுத்தி இறங்கி போனால் பின்னால் உள்ளவர்கள் எனக்கு அறை விட்டிருப்பார்கள். நேராக ஞானியிடம் சென்றேன்.

நடந்ததை கூறினேன். ஏன் ஞானி இப்படி செய்கிறான் அவன் என்று வெறுத்துப் போய் கேட்டேன்.

முட்டாள் சிலவற்றை சாக்கடையி்லிருந்து குளிப்பாட்டி அலங்கரித்து வீட்டின் நடுவில் வைத்தாலும் அவை மீண்டும் சாக்கடைக்கு போகும் என்று கேள்விப்பட்டதில்லையா.

கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏன் என்று புரியவில்லையே

மின்வண்டிகள் கண்டதுண்டா. சிலவற்றிற்கு முன்னால் இன்ஜின் இருக்கும். அதுவே பின்னுள்ள பெட்டிகளை இட்டு செல்லும். There are men who are self-motivated. அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் கூடியவர்கள். தங்களுக்கு தாமாகவே உந்து சக்தியாக விளங்குபவர்கள்.

சில நேரம் இன்ஜின் பின்னாலிருந்து பெட்டிகளை தள்ளுவதை பார்த்திருப்பாய். These are the men who need motivation from outside, but they will deliver. இவர்கள் பிறர் பேச்சை கேட்டாலும் அது சரிவரி செய்து வெற்றி பெறுவர்.

ஆனால் நீ உதவினது போல் உள்ள சிலரோ சுலபமாக ஒன்றும் செய்யாமலேயே பணம் வரும்போது வாழ்கை ஓடும் போது நாம் எதற்காக என்ன செய்ய வேண்டும் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு பிச்சை எடுக்க ஊனம் வேண்டும் என்றில்லை. ஏனென்றால் இவர்களுடைய ஊனம் இவர்கள் மனதில். இவர்கள் இருந்தும் இறந்துவிட்ட மனிதர்கள்.

அப்ப நான் செய்தது வீணாக போனதா என்றேன் வருத்தத்துடன்.

முட்டாள் கைகளை மேலே தூக்கி உதவிக்கு ஏங்கும் பலருக்கு உன் கை கொடு. அவர்கள் உன் கை பிடித்து வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். அதைவிடுத்து புதைமணலில் உள்ளே போகும் இவன் போல் ஒருவனுக்கு உன் கையை கொடுத்தால் அவன் உன்னையும் உள்ளே இழுத்து சென்றுவிடுவான்.

No comments: