Skip to main content

மீண்டும் ஞானி - 13. வித்தியாசமான ஞானி

மீண்டும் ஞானி  13. வித்தியாசமான ஞானி



அன்று வீட்டில் பிரச்சனை. சரி ஞானியை போய் பார்க்கலாம் என்று பலரிடமும் விசாரித்து கொண்டு அவன் வீட்டை சென்றடைந்தேன். பெரிய வீடு. வாசலில் சிவப்பு கலர் மாருதி கார். ஞானிக்கு நல்ல வசதிதான் போல என்று நினைத்து உள்ளே சென்றேன்.

பெரிய அறையில் நிறைய புத்தகங்கள். அழகாக மொழி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நிறைய குறுந்தட்டுகள், ஒலி நாடாக்கள், ஒளி நாடாக்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெண் வாசமே இல்லை. ஞானி திருமணமாகாதவனோ.

ஒரு மேசையில் நிறைய காகிதங்கள். ஏதேதோ எழுதியிருந்தன. நிறைய பேனாக்கள். சின்ன காகிதங்களில் சில படங்கள் பென்சிலால் வரையப்பட்டிருந்தன. ஒரு வெள்ளை எழுத்து பலகையில் ஏதோ குறிப்புகள்.

ஞானி குளித்து முடித்துவிட்டு வந்தான். 

வா நண்பா என்ன விஷயம்? இன்று என்னை தேடி வந்திருக்கிறாய் என்றான்.

ஞானி, எனக்கு மனது சரியில்லை. வீட்டில் சண்டை உன்னை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். ஏதாவது திரைப்படம் பார்க்க போகலாமா? என்று கேட்டேன். திரைபடங்களை பற்றி பெரிய உரையாற்றப்போகிறான் என்று பயந்துக் கொண்டே.

போகலாமே என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் ஞானி. உடை அணிந்து கொண்டு சைக்கிளை எடுத்தான்.

கார் இருக்கே என்றேன்.

இருக்கட்டுமே என்றான்.

காரில் போகலாமே என்றேன்.

உடலில் தெம்பு இருக்கும் வரை நடையும் சைக்கிளும் தான் என்றான்.

அப்போ கார் எதுக்கு வாங்கினே.

அது வலுவிழந்து போகும்போது பயன்படுத்த.

அப்போ எப்போது வலுவிழந்து போகிறாயோ அப்போது வாங்கினால் போதாதா என்றேன்.

எப்போது வலவிழந்து போகிறேனோ அப்போது வாங்க வசதியில்லையென்றால்?

போட்டு தாக்கு. அது தான் ஞானி என்றேன் சிரித்துக் கொண்டே.

அது எனக்கு தெரியும் என்றான் அதே அலட்ச்சியத்துடன்.

7 கிலோ மீட்டர் தூரம்பா என்றேன்.

நீ உட்கார் நான் ஓட்டுகிறேன் என்று என்னை பின்னால் அமர வைத்து ஓட்டிச் சென்றான். 

நினைத்தற்கும் வேகமாக சென்றடைந்தோம்.

தியட்டர் வாசலுக்கு வந்ததும் 25 ரூபாய் எடுத்து நீட்டினான். இல்லை வேண்டாம் நான் வாங்குகிறேன் என்றேன்.

முட்டாள். இது எனக்கு மட்டும் தான் என்றான்.

ஞானி ரொம்ப கறார் பேர்வழி தான். கஞ்சனோ என்று நினைத்துக் கொண்டே அவனை முறைத்துவிட்டு இரண்டு சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.

நான் ஆச்சர்யப்படும் நிகழ்ச்சிகள் நடந்தன. சிரிப்பு காட்சிகளில் ஜோராக வாய்விட்டு சிரி்த்தான். அழும் காட்சிகளில் அவன் கண்களில் கண்ணீர். சண்டை காட்சிகளில் விரைத்து அமர்ந்திருந்தான். நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்று தோன்றினாலும் வெளியே வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு அமைதியாக இருந்தேன்.

வெளியே வந்ததும் ஞானி, நீ சோக காட்சிகளில் அழுதாயே.

ஆம் என்றான்.

நகைச்சுவை காட்சிகளில் சிரித்தாயே.

ஆம்.

ஏன்?

அதற்காக தானே கதை எழுதியிருக்கிறார்கள்.

நீ தான் ஞானி ஆயிற்றே.

ஆம் ஞானி தான். கல் இல்லை. ஒரு கதை படித்தால் அதை ஆழந்து படிக்கவேண்டும். திரைப்படமும் அப்படித்தான். அதற்காகத்தானே திரைப்படம் பார்க்க வருகிறோம்.

அது சரி. அதெல்லாம் சும்மா தானே.

என்ன சொல்கிறாய் நீ? நிஜமாகவே குண்டடி பட்டு ஒருவர் இறக்க வேண்டும் என்கிறாயா. இல்லை தக்காளி சாற்றுக்கு பதிலாக நிஜ ரத்தம் வந்தாக வேண்டும் என்கிறாயா? என்று கேட்டான்.

இல்லை நீ தான் பொடி மட்டை பற்றி கூறினாயே?

ஆம். நான் சொன்னது உன் வாழ்கையில் நடக்கும் விஷயங்களில் நீ பொடி மட்டையாக இருக்க வேண்டும் என்பதற்காக. சாலையில் ஒரு குழந்தை அடிபட்டு கிடந்தால் கை கொட்டி சிரித்துக் கொண்டிருப்பேன் என்று நினைக்கிறாயா. மற்றவர்களின் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு கரிசனை கொள். அன்பு காட்டு. ஆதரவாக இரு.

அப்போது உணர்ச்சிகள் கூடாது என்று சொன்னாயே? ஒரு நாள் கனவு கண்டதற்காக திட்டினாய் என்னை.

முட்டாள். உணர்ச்சிகள் இல்லாவிட்டால் நீ கல்லாகிவிடுவாய். உணர்ச்சிகள் கொள். ஆனால் உணர்ச்சிகளை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்

சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். நான் யோசித்துக் கொண்டே ஓடிச் சென்று பின்னால் ஏறினேன்.

பாகம் 2 நிறைவுற்றது

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்