மலரும் நினைவுகள்:தண்ணீர் பால் நினைவுபடுத்திய சம்பவம்...........

தண்ணீர் பால் நினைவுபடுத்திய சம்பவம்...........

Full Cream பால் வாங்குவது தான் வழக்கம். அதாவது வாங்கினால். இல்லையென்றால் Powder பால் தான். காரணம் bachelor lifeல் அவர்கள் சொல்லும் expiry dateக்குள் முழு litreஐயும் குடிப்பது சாத்தியம் அல்லவே. Full Cream பால் கொழுப்பு தான் என்று சொல்வது காதில் விழுகிறது. காரணம் சுவைக்காக மட்டுமல்ல. மீண்டும் அதில் தண்ணீர் தான் கலக்கப்போகிறேன். இருந்தாலும் தண்ணீர் பாலில் அதாவது skimmed milkல் சுவையே இல்லை. வெறும் சுடுநீரில் காபி கலந்தது போல் இருக்கும்.

இன்றும் மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன் பாலை தண்ணீரில் கலந்து சுடவைத்து ஒரு காபி கலந்தேன். சே, நிறைய தண்ணீர் கலந்துவிட்டேன் போலிருக்கிறது. இதுபோல தண்ணீர் காபி நான் டிரெயினிலும் குடித்ததில்லை. கடைசியாக எப்போது இதுபோல தண்ணீர் காபி குடித்தேன் என்று யோசித்தபோது இந்த சம்பவம் என்னை பல ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்றது.

அப்போது நான் 11வது வகுப்பில் இருந்தேன். நாகப்பட்டினத்தில் படித்து வந்தேன். எல்லா இளைஞர்களை போல தேசப்பற்று, புரட்சி, ஏழ்மையை கண்டால் எழுச்சி, நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம், அடிமட்டத்து மக்களை உயர்த்த வேண்டு்ம் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது. சிறுவயதில் எல்லோருக்கும் இருப்பது தானே. பெரியவர்கள் ஆன பிறகு தானே சுயநலம் தொற்றிக் கொள்கிறது.

வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய குடிசை. அதன் முன்னால் ஒரு பெட்டிக் கடை. பெரிய பொருட்கள் எதுவும் கிடைக்காது. ஏதாவது சிறிய சிறிய பொருட்கள் கிடைக்கும். எப்போதும் அங்கு செல்வது கிடையாது. எப்போதாவது சிறிய சிறிய சமையல் பொருட்கள் வேண்டும் என்றால் வீட்டில் அனுப்புவார்கள்.

அவ்வாறு ஒரு முறை சென்ற போது 10 ரூபாய் நீட்டி ஏதோ கேட்டேன். அங்கு ஒரு பாட்டி இருப்பார். அன்று சில்லறை இல்லை போலும் தன் மகளை சில்லறை வாங்க அனுப்பினார். வெயில் அதிகமாக இருந்ததால் குடிசைக்குள் வந்து நின்றுக் கொள்ளும்படி கூறினார். அருகாமை இடங்களுக்கு செருப்பு போடாமல் சென்ற காலம் அது.

குடிசைக்குள் நின்ற நான் அந்த பாட்டியின் பேரன் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். நம் சிறுவயதில் நோட்டு புத்தகங்களின் ஓரங்கள் சுருண்டு கிழிந்திருக்கும் அல்லவா. அதுபோல அவனுடைய புத்தகங்களும் இருந்தது. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். நான் பெரியவன் இல்லையா. புத்தகங்களை எப்படி பராமரிப்பது என்று ஒரு இலவச ஆலோசனை தந்தேன்.

அந்த பாட்டி கவனித்துக் கொண்டிருந்தார். தன் மகளை மாப்பிள்ளை விட்டுவிட்டதாகவும் இந்த குடிசை தவிர வேறு ஒன்றுமே அவர்களுக்கு சொத்து இல்லையென்றும் அவருடைய மகள் சில வீடுகளில் வீட்டு வேலை செய்வதாகவும் அவர்கள் இருவரும் வாழ்வதே இந்த சிறுவனை படிக்க வைக்கத்தான் என்பதையும் சோகமாக சொன்னார். நேரம் கிடைக்கும்போது அவனுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மிகவும் நன்றியுடையவராக இருப்பார் என்றும் சொன்னார்.

நானும் அந்த சிறிய தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் பலமணி நேரம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தால் முன்னும் பின்னும் நேரம் ஒதுக்குவதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்று நினைத்து ஏற்றுக் கொண்டேன். வாரம் மூன்று முறை அந்த சிறுவனுக்கு பாடம் சொல்லித் தருவேன்.

அந்த சிறுவன் அரசாங்க பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஆங்கிலம் குறைவாகவே அறிந்திருந்தான். நானும் அராசங்க பள்ளித்தான் இருந்தாலும் ஆங்கிலம் விருப்பமான பாடம். கணிதம் நமக்கு வீக். இருந்தாலும் அவனுடைய பாடம் சொல்லித் தருவதில்லை ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.

குடிசைக்குள் சென்று அமர்ந்து அவர்கள் வாழும் வாழ்கையை அருகாமையில் பார்த்து பாதிப்படைந்ததெல்லாம் ஒரு காலம். மிகவும் குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும்.

ஒவ்வொரு முறை நான் பாடம் நடத்த வரும்போதும் ஒரு பால் ஒரிரு கடலை உருண்டைகள் தருவார். நான் எத்தனை மறுத்தாலும் இவையிரண்டும் கட்டாயம் உண்டு. காசு கொடுப்பதற்கு பதிலாக தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்தார் போலும் அந்த பாட்டி. நானும் அவர்களுடயை அன்புக்கு கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்வேன்.

பால் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள் போலும். மீன்களை விட்டால் நீந்தும் அளவிற்கு தண்ணீர் தான். ஒரு சொட்டு பாலிற்கு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றுவார்கள் போலும். வீட்டிற்கு வந்து கெட்டிப்பாலில் காபி குடிக்கும் போது அந்த நிஜத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஒரு புறம் மாடமாளிகையும் மறுபுறும் தரையை தட்டும் குடிசைகளும் ........யாரை குற்றம் சொல்வது.

இன்று தண்ணீர் பால் குடித்ததும் அந்த ஞாபகம் வந்து என் நெஞ்சை அடைத்துக் கொண்டது. கணினியை இயக்கி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றியது.
 
-மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி