சிறுகதை: வறண்ட இதயங்கள்

என்னுடைய முந்தைய நிறுவனத்தின் முதலாளியை பார்த்த போது எனக்கு அழுகை வந்துவிட்டது. என்ன மாதிரி இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தோன்றியது.

வழக்கமான சம்பாஷணைகளை தவிர்த்து ஏன் சார்? என்னாச்சு என்று கேட்டே விட்டேன்.

அட ராஜாவா. வாப்பா. நல்லாயிருக்கியா? எங்கே வேலை செய்யறே என்று அன்பாக கேட்டார். அவருடைய பழைய டாட்டா சீயேராவில் இருந்து இறங்கியவாறே.

நான் நல்லா இருக்கேன் சார். இப்போ ஒரு பெரிய கம்பெனியில் பொது மேலாளராக இருக்கேன். நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க சார் என்று கேட்டேன்.

நான் எடுத்த முடிவெல்லாம் ஒரு காலத்துல சரியா போய்கிட்டு இருந்தது இல்லையா. இப்ப சமீப காலத்திலே எடுத்து ஒன்னு ரெண்டு முடிவு கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்திடுத்து என்று விவரித்தார். நம்பிக்கையானவர்கள் அவரை ஏமாற்றிய கதை.

பேசிக் கொண்டே நடந்த போது தேனீர் கடையின் அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டிலிருந்து அழுகை குரல் வந்தது. ஒரு பெண்மணி ஓடி வந்து என் கொழந்தைய காப்பாதுங்களேன் என்று அழுதவாறு எங்களை பார்த்து கதறினாள்.

நான் ஆமா சென்னையில் வழிபோக்கர்களை ஏமாற்ற புது புது வழிகளை கண்டுபிடித்தவாறே இருக்கிறார்கள் என்று நினைத்து சலித்துக் கொண்டேன். பசி என்று யாராவது பணம் கேட்டால் பணம் தராமல் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கம் எனக்கு. பணம் தான் வேணும் சாப்பாடு வேண்டாம் என்று கேட்டவர்களை பார்த்து அப்புறம் ஏன் பசிக்குதுன்னு பொய் சொல்றே என்று சாடுவேன்.

இவ்வாறு நினைத்துக் கொண்டே உள்ளே ஓடிச் சென்று பார்த்தோம். ஒரு குழந்தை வாயில் நுரை தப்பிக் கிடந்தது. என் முதலாளி அவனை தூக்கிக் கொண்டு வண்டியை நோக்கி ஓடி வர, நான் கதவை திறந்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தேன். அந்த பெண்மணி பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். 

இங்கே ஆஸ்பத்திரி எங்கே இருக்கு என்று பதட்டத்துடன் அந்த பெண்மணியை கேட்டேன். 

ரெண்டு தெரு தள்ளி லக்ஷ்மி நர்ஸிங்க ஹோம் இருக்கு சார் என்றாள் அழுதவாறே. 

வண்டியை அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஓட்டினேன். 

சுமார் 10,000 செலவானது. ஆனால் அவரிடம் 6000 தான் இருந்தது. நான் மீது 4000 கொடுத்தேன். அவர் வருத்தத்துடன் என்னை பார்த்தார். 

சார் கவலை படாதீங்க சார். யாரையும் நம்பற மாதிரி இல்லே இந்த காலத்துல. நாங்க உங்க கிட்டே வேலை செய்த போது யாரையும் நம்பாம இருந்தீங்க. அப்பெல்லாம் சே இவருக்கு யார் மேலும் நம்பிக்கையே வராதான்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கோம். ஆனா வியாபாரம் பெருகினதும் சில பேரை நம்ப ஆரம்பிச்சீங்க. அவங்க உங்க கழுத்தறுத்துட்டாங்க என்றேன் ஆறுதலாக.

மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்து மருந்து கொடுத்த பிறகு அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவர்களை இறக்கிவிட்டோம். 
அந்த பெண், ரொம்ப நன்றி சார். சமயத்துல வந்து கொழந்தைய காப்பாத்திட்டீங்க. ஆனா கொடுக்கறதுக்கு என்கிட்ட ஒரு பைசா கூட இல்லை என்றார்.

கவலை படாதீங்க அம்மா என்று கூறிவிட்ட மீண்டும் வண்டியை நோக்கி நடந்தோம். 

வண்டிக்கு வந்த பிறகு தான் என் முதலாளி கண்ணாடியை அந்த வீட்டிலேயே விட்டதை உணர்ந்தார். வாப்பா போய் கண்ணாடி எடுத்து வரலாம் என்று சொல்லி திரும்பி நடந்தார். நானும் தொடர்ந்தேன். 
அங்கே கேட்ட பேச்சு எங்கள் இருவரையும் திக்குமுக்காடச் செய்தது. அப்படியே சில நிமிடங்கள் உறைந்து நின்றுவிட்டோம்.

"ஆமா டாக்டர். 5000 கொடுத்திடுங்க. கொழந்தைக்கு விட்டாமின் மாத்திரை தானே கொடுத்தீங்க. பாவம் நல்லவங்க போலிருக்கு ஏமாந்துட்டாங்க. இன்னும் இரண்டு நாள் கழிச்சி வேற முட்டாளுங்க மாட்டறாங்களான்னு பாக்கறேன்.


~மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி