மீண்டும் ஞானி - ஞானி பாகம் இரண்டு - தத்துவ கதைகளின் தொகுப்பு

மீண்டும் ஞானி  1. பொடி மட்டை
எழுத்து மோகன் கிருட்டிணமூர்த்தி


17 வருடங்களுக்கு பிறகு ஞானியை நான் வழக்கமாக செல்லும் தேனீர் கடையின் வாசலில் சந்தித்தேன்.

வணக்கம் ஞானி, நலமா என்று கேட்டேன்.

அடேடே மனிதா, நான் நல்ல சுகம். நீ எப்படி என்றான்.

என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை உற்றுப் பார்த்தேன்.

நான் தொந்தியுடன் தலை நரைத்து கிழடு தட்டியிருந்தேன். அதை அவன் பார்ப்பதை நன்கு உணர்ந்தேன். அவனோ அதே போல் இருந்தான். கண்களில் அந்த துருதுருப்பு, உடலில் எந்த மாற்றமும் இல்லை. உடை மட்டும் வேட்டி சட்டையாக மாறியிருந்தது. தலை முடியில் நரையேதும் இல்லை.

ஞானி, அதெப்படி நீ 17 வருடத்திற்கு முன் பார்த்த மாதிரியே இருக்கிறாய்.

அது உனக்கு அநாவசியம் என்றான்.

சொல்லேன் கேட்போம் என்றேன் நான்.

பொடி மட்டை தும்முமா என்று கேட்டான்.

நான் யோசித்து பார்த்துவிட்டு, தும்மாது என்றேன்.

அதெற்கென்ன இவ்வளவு யோசனை. சரிதான் தும்மாது என்றான்.

அதெற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்.

இருக்கிறது. வாழ்கை பொடி போல. நீ பொடி மட்டை போல. வாழ்கையின் நிகழ்வுகள் உன்னை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டால் உன் உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இருக்காது. பொடி மட்டை தும்மக்கூடாது.

சரிதான்.

சாராய பாட்டில் சாராயம் குடித்தால் நீ குடிக்க என்ன மிஞ்சும். பாட்டிலுக்கு போதை ஏறக்கூடாது. நீ பாட்டில். உன்னை சுற்றி இருப்பது சாராயம். பார்த்து போதையில் விழாது இருந்தால் பிரச்சனையே இல்லை என்றான்.

முதன் முறையாக அவன் பேசியது எனக்கு நன்றாக புரிந்தது. ஒரு வேளை அவன் எனக்கு புரியும் வகையில் பேசினானா இல்லை எனக்கு அறிவு வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

நான் போகலாமா என்று கேட்டான்.

அடேடே என் அனுமதியெல்லாம் கேட்கிறானே. இதே பழைய ஞானியாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவானே என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவன் மாறவில்லை. நான் அவனுடயை சைக்கிளில் கைவத்து நின்றுக் கொண்டிருந்தேன்.

கையை எடுத்ததும் சட்டென்று ஏறி பட்டென்று மாயமானான் ஞானி.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்