ஞானி - 3. கல்

ஞானி - 3. கல்

என் வீட்டின் வாசல் வழியில் இருந்த கல்லை நகர்த்திக் கொண்டு இருந்தேன். ஞானி வந்தான்.

“அடே! என்ன இந்த பக்கம். என் வீடு இதுதான் என்று உனக்கு எப்படி தெரிந்தது?”

“உன் வீடா?”

“ஆம். இது என் வீடு தான்” - என்றேன்.

“பாவம். மனிதர் இல்லாத ஒன்றை தனது என்கிறார்”.

“நீ சொல்வது தான் என்ன?”

“உண்மை”.

“என்ன?”

“ஆம். என்ன செய்கிறாய்?”

“பாதையில் தடையாக இருந்த கல்லை அகற்றுகிறேன்”.

நான் சொன்னதை கேட்டு சிரித்தான்.

“எதற்கு?” என்றேன்.

“பின்னே! உன் பாதை எது என்று உனக்கே தெரியாது. ஆனால் அதிலிருந்த தடையை அகற்ற போய்விட்டாயே? சிரிக்காமல் என்ன செய்வது?”

“என்னை குழப்புகிறாய்!”

“எத்தனையோ தடைகள். ஆனால் இந்தக் கல்லை தடை என்கிறாய். மனிதர்களே இப்படித்தான்!” என்று அங்கலாயித்தான்.

“நீயும் மனிதன் தானே?”

“இல்லை. ஞானி”.

“தடைகள் என்றாயே? என்ன அது?”

“நீதான் உனக்கு தடை”.

“என்ன? நானேவா எனக்கு தடை?”

“ஆம். உன் பார்வை உனக்குத் தடை. நீ கேட்பது உனக்குப் பகை. உன் பேச்சு உனக்கே எதிரி”.

“நீ சொல்வது எப்போதுமே எனக்கு புரிவதில்லை. எனக்கு அறிவு பற்றாது. நீ நிறைய பேசுகிறாய். சரி விடு. சாப்பிடவா!” என்றேன்.

“நாளை யார் தருவார்?”

“நீ சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்?”

தோளில் இருந்த பையைக் காட்டினான். அதனுள் நிறைய கடலை உருண்டைகள்.

“பணம்?”

சட்டைப் பையிலிருந்து ஒரு கட்டுப் பணத்தை காட்டினான்.

“எப்படி கிடைத்தது?”

“கிடைத்தது என்றா கேட்டாய்? நீ என்னை சந்தேகிக்கிறாய்?”

“இல்லை. எங்கு வேலை செய்கிறாய்?”

“ஞானி மனிதன் போல சிந்திக்க கூடாது. மனிதனைப் போல வேலை செய்து சம்பாதிக்கலாம்”.

“எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாய்? அதன் பெயர் என்ன?”

“மீண்டுமா பெயரைக் கேட்கிறாய்? உனக்கு அறிவில்லை?”

“மன்னித்துக் கொள். உன் முதலாளி யாரென்று சொல்!”

“யாருக்கு யார் முதலாளி? நானே எனக்கு முதலாளி”.

“நீ சொல்வது விளங்கவில்லை”.

“மனிதன் முட்டாள்தான்”.

அவன் போயேவிட்டான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி