தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 1

இன்னும் பெயர் வைக்கவில்லை

புதிய தொடர்கதை

எழுத்து மோகன் கிருட்டிணமூர்த்தி


1
சென்னையின் மிகவும் பிரபலமான அதே நேரத்தில் ஒரு மணிக்கு பல ஆயிரம் கறக்கும் மனோதத்துவ மருத்துவரின் முன் அமர்ந்திருந்தேன்.
ஒரு சிறிய இருட்டறை. தூரத்தில் சிறிய விளக்கு. நன்றாக சாய்ந்து அமர ஒரு தோல் இருக்கை அருகில் சிறிய குவளையில் குடிநீர். எதிரே ஒரு சிறிய முக்காலியில் மருத்துவர்.

பல நிமிடம் அமைதியாக இருந்தோம். அந்த அமைதி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. யுகமாகியிருக்கும் போல் தோன்றியது. காத்திருந்தேன். காத்திருக்க செய்திருந்தார் அவர்.

வயது அறுபது இருக்கும். என்னைப்போல பல பேரை பாத்திருப்பாரா அல்லது உலகிலேயே நான் ஒருவன் தான் இதுபோலா. பல பேர் இவரிடம் ஆலோசிக்க சொல்லியிருந்ததால் கடைசி முயற்சியாக இவரிடம் வந்திருக்கிறேன்.

சொல்லுங்க என்றார் நேரிடையாக.

மணிக்கு காசு வாங்குவதால் நேரம் ஆக ஆக நான் கொடுக்க வேண்டிய பணமும் அதிகமாகிவிடும் என்ற பயத்தில் இருந்தேன். படபடவென்று பேசினேன். என்னுடைய பிரச்சனைகளை சில நிமிடத்தில் சொல்லி முடித்தேன்.

அவர் ஒப்பவில்லை. மீண்டும் அமைதியாக இருந்தார். என்னையும் பேசவிடாமல் கையமர்த்தினார்.

சொல்லுங்க என்றார் மீண்டும்.

கடுகு வெடித்துவிடும் போல என்ன சார் எல்லாத்தையும் சொல்லிட்டேனே என்றேன் அலுப்புடன்.

மீண்டும் அமைதியானார். இவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று யோசித்தேன்.

மென்மையாக சிரித்தார். இந்த நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்பது போல் அவர் மீது என் பார்வையை வீசினேன்.

உங்க கிட்டே யார் சொன்னது என்று கேட்டார் மொட்டையாக.
யாரா. எதைப்பத்தி என்றேன் குழப்பத்துடன்.
நான் ஒரு மணிக்கு பத்தாயிரம் வாங்குறேன்னு.
என் மனதை படித்தது போல் இருந்தது.

எதுக்கு கேக்கறீங்க என்றேன்.

இல்லை இப்படி ரயில் பிடிக்க ஓடற மாதிரி படபடன்னு பேசிட்டீங்களே.
ஆமாம் சார். இங்க என்னை போகச் சொன்ன நண்பர் சொன்னார் என்றேன் சற்று வெட்கத்துடன்.

கவலை படாதீங்க. இங்க மணிக்கு எல்லாம் காசு வாங்கறதில்லை. ஒரு மருத்துவர் பிரபலமாயிட்டா அவரை பத்தி இப்படி வதந்திகள் வரது சகஜம் தான். நீங்க இந்த கன்சல்டேஷனுக்கு 150 ரூபாய் கொடுத்தால் போதும். குணமான பிறகு என்னுடைய ஃபீஸை நான் கேட்டு வாங்கிக்கறேன். போதுமா என்றார்.

நன்றியுடன் அவரை பார்த்தேன். சார், இந்த கன்சல்டேஷன் எத்தனை நிமிஷத்திற்கு என்று இன்னும் சந்தேகம் தீராமல் கேட்டேன்.
ஹா ஹா என்று பெரியதாக சிரித்தார். ஒரு நாள் போதுமா. இரண்டு நாள். நீங்க எத்தனை மணி நேரம் வேணா எடுத்துக்கலாம் என்றார்.
நான் நம்பவில்லை.

இங்க பாருங்க கதிர் – அது தான் என் பெயர். கதிரவன். காசை பத்தி இப்ப கவலை வேண்டாம். உங்க பிரச்சனையை சொல்லுங்க. எத்தனை மணி நேரமானாலும் நான் கேக்கறேன். என் வீடு மேலே தான் இருக்கு.
அது சரி சார். அந்த கவலையில்லை எனக்கு. ஆனா நான் பிரச்சனையை இப்பத்தானே சொன்னேன் என்றேன் மீண்டும் அலுப்பு தட்டும் குரலில்.
கதிர், நீங்க படபடன்னு பேசினதை நான் கேட்கலை. பொறுமையா சொல்லுங்க. பதட்டம் வேண்டாம். பயம் வேண்டாம்.
எனக்கென்ன பயம். என்னை பார்த்து மத்தவங்க தான் பயப்படனும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அமைதியானேன். எங்கிருந்து ஆரம்பிப்பது.
சார், என்னுடைய பத்தாம் வகுப்பிலிருந்து எனக்கு கதைகள் படிக்கறதுன்னா ரொம்ப இஷ்டம்.

சரி.

ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு புஸ்தகம் படிச்சிடுவேன்.

சரி.

படிக்கறது நல்லதுன்னு எங்கப்பா எல்லா புஸ்தகத்திற்கும் எப்ப கேட்டாலும் பணம் கொடுப்பாரு.

சரி.

அப்ப எங்க வீட்ல டிவி இல்லை. காலேஜ் படிக்கும் போது தான் டிவி வந்தது. அப்பலேர்ந்து படிக்கறது குறையாட்டாலும் நெறைய டிவியும் பார்க்க ஆரம்பிச்சேன்.

சரி.

எம்எஸ்சி மைக்ரோ பயாலாஜி படிச்சேன். ஃபர்ஸட் கிளாஸ்.
அப்படியா. ரொம்ப நல்ல விஷயம் பலே.
அதுக்கப்புறம் வேலைக்கு போனேன். ஆராய்ச்சி விஞ்ஞானியா வேலை கிடைச்சுது. ஜூனியர் போஸ்ட் தான். ஒரு வருஷம் வேலை செஞ்சேன். அப்புறம் உடம்பு சரியில்லாமே போச்சு. ஒரு மாசம் லீவுல இருந்தேன். அதுவே மூணு மாசம் ஆயிடுச்சு. அந்த நேரத்திலே பொழுது போகாம இன்னும் புக்ஸ் படிச்சேன். அதுகப்புறம் என்னாச்சுன்னு தெரியலை. வேலைக்கும் போகலை. இப்ப மூணு வருஷமா சமுதாயத்திலேர்ந்து எல்லாருமே என்னை தூக்கி வெளியே போட்ட மாதிரி இருக்கு.

சரி. நான் புரிஞ்சிகிட்ட வரைக்கும் சொல்றேன். சரியான்னு சொல்லுங்க என்று ஆரம்பித்தார் மருத்துவர். கண்ணாடியை கழற்றி கீழே வைத்தார். தன் புருவங்களை நன்றாக அழுத்திக் கொண்டார் ஒரு முறை.
உங்களுக்கு நிறைய படிக்கிற பழக்கம் சின்ன வயசிலேர்ந்து. நாவல், கதைகள், கவிதைகள், சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், ஆட்டோபையோகிராபிஸ் அப்படி எல்லாத்தையும் படிப்பீங்க. எம்எஸ்சி முடிச்சீங்க. வேலைக்கு சேர்ந்தீங்க. கொஞ்ச நாளைக்கு பிறகு உடம்பு சரியில்லைன்னு விடுமுறை எடுத்தீங்க. அப்பவும் நிறைய படிச்சீங்க. அப்புறம் திடீர்னு ஒரு நாள் உங்களுக்கு நீங்க படிக்கும் புத்தகங்களின் கதாநாயகனோ கதாநாயகியோ என்னென் உணர்ச்சிகள் எல்லாம் அனுபவிக்கிறாங்களோ அதையே நீங்களும் அனுபவிக்கற மாதிரி உணர ஆரம்பிச்சீங்க. அவங்களுக்கு வலிச்சா உங்களுக்கு வலிக்கற மாதிரி இருக்கு. அவங்க சந்தோஷமா இருந்தா நீங்க சந்தோஷமா இருக்கீங்க. அவங்க பிரஸ்டேட்டா இருந்தா நீங்களும் அதை அனுபவிக்கறீங்க. சரியா.

ஆமாம் சார்.

ம்ம் என்று யோசித்தார். பிறகு தன்னுடைய மேசையின் மேல் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார். ஒரு சிறிய மாத்திரையை என்னிடம் கொடுத்தார். தண்ணீர் குவளையை நீட்டினார்.

இந்த மாத்திரை போட்டுக்கோங்க. உங்களை நாளைக்கு இதே நேரத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லி எழுந்தார்.

நன்றி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.



தொடரும்.....

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி